வேற லெவல் ரவிச்சந்திரன் அஸ்வின்; எம்எஸ் தோனியின் இந்த சாதனையை சமன் செய்து அசத்தல்
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வியாழக்கிழமை (செப்டம்பர் 19) தொடங்கிய வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் முடிவில் இந்திய கிரிக்கெட் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 339 ரன்களைக் குவித்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி டாப் ஆர்டரின் சொதப்பலால் ஆட்டம் தொடங்கிய ஒரு மணி நேரத்திலேயே 34 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எனினும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ரிஷப் பந்துடன் சேர்ந்து அணியை மீட்டார். ஜெய்ஸ்வால் 56 ரன்களும், பந்த் 39 ரன்களும் எடுத்தனர். அதன்பின்னர் ஜோடி சேர்ந்த ரவீந்திர ஜடேஜா மற்றும் அஸ்வின் ரவிச்சந்திரன் அஸ்வின் பொறுப்புடன் விளையாடி அணியை மீட்டனர். ஜடேஜா 86 ரன்களுடனும், அஸ்வின் 102 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
சாதனை விபரங்கள்
இந்த போட்டி அஸ்வினுக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் 144வது இன்னிங்சாகும். இதில் அவர் 108 பந்துகளை எதிர்கொண்டு 102 ரன்களுடன் முதல் நாள் முடிவில் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் அஸ்வினுக்கு இது இரண்டாவது சதமாகும். இதற்கிடையே இந்த சதத்தின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் சதங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் எம்எஸ் தோனியின் சாதனையை அஸ்வின் சமன் செய்துள்ளார். எம்எஸ் தோனி இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பாவனாக இருந்தாலும், பேட்டிங்கில், குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் 144 இன்னிங்ஸ்களில் சேர்த்து மொத்தமான ஆறு சதங்களை மட்டுமே அடித்திருந்தார். இந்நிலையில், தற்போது தனது 144வது இன்னிங்ஸில் விளையாடி வரும் அஸ்வின், இதில் ஆறாவது சதத்தை அடித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனியின் ரெகார்டை சமன் செய்துள்ளார்.