ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகிறார் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரரான குவிண்டன் டி காக்
இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவிருக்கும் ஒருநாள் உலக கோப்பைத் தொடருக்குப் பின்பு, தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரரான குவிண்டன் டி காக், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இது குறித்த அறிவிப்பினை தங்களுடைய அதிகாரப்பூர்வ ஆண்கள் கிரிக்கெட் அணியின் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறது தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம். 2021ம் ஆண்டே, தன்னுடைய குடும்பத்துடன் கூடுதல் நேரம் செலவழிக்க விரும்புவதாகக் கூறி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார் குவிண்டன் டி காக். அதனைத் தொடர்ந்து, தற்போது ஒருநாள் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறவிருப்பதாக அறிவித்திருக்கிறார்.
ஒருநாள் போட்டிகளில் குவிண்டன் டி காக்:
தென்னாப்பிரிக்க அணிக்காக 2012ம் ஆண்டே சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான குவிண்டன் டி காக், 2013 ஜனவரி 19ல் நியூசிலாந்து அணிக்கு எதிராக தனது முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாடினார். தென்னாப்பிரிக்க அணிக்காக 140 ஒருநாள் போட்டிகளில் பங்கெடுத்திருக்கும் அவர், ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்களைக் குவித்த தென்னாப்பிரிக்க வீரர்கள் பட்டியலில் 7வது இடத்தில் இருக்கிறார். ஒருநாள் போட்டிகளில் 17 சதங்கள், 29 அரைசதங்கள் மற்றும் 44.85 என்ற சராசரியில் 5,966 ரன்களை விளாசியிருக்கிறார் குவிண்டன் டி காக். ஒருநாள் போட்டிகளில் விக்கெட் கீப்பராக 197 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். இத்துடன் விக்கெட் கீப்பராக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய தென்னாப்பிரிக்க வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருகிறார் டி காக்.
டெஸ்ட் போட்டிகளில் டி காக்:
2021ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பாக, தென்னாப்பிரிக்க அணிக்காக 54 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கும் டி காக், 38.82 என்ற சராசரியில் 3,300 ரன்களைக் குவித்துள்ளார். இவற்றில், 6 சதங்கள் மற்றும் 22 அரைசதங்களும் அடக்கம். ஒருநாள் கிரிக்கெட்டைப் போலவே, டெஸ்ட் கிரிக்கெட்டிலும் விக்கெட் கீப்பராக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய தென்னாப்பிரிக்க வீரர்கள் பட்டியலில் 232 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். ஒருநாள் உலக கோப்பைத் தொடர்களில் 30 என்ற சராசரியுடன் இதுவரை 450 ரன்களைக் குவித்திருக்கிறார் குவிண்டன் டி காக். இந்தியாவிலேயே அவருடைய சர்வதேச ஒருநாள் போட்டியையும் விளையாடவிருக்கிறார் அவர்.