இந்திய ஒலிம்பிக் சங்க தேர்தல் சர்ச்சை: ஐஸ் ஹாக்கி கூட்டமைப்பு பிரதிநிதியாக பி.டி. உஷா நியமனத்திற்கு எதிர்ப்பு
செய்தி முன்னோட்டம்
இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (IOA) நிர்வாகக் குழுவுக்கான தேர்தல் வரும் டிசம்பர் 5-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், சங்கத்தின் தற்போதைய தலைவர் பி.டி. உஷாவின் வேட்புமனுத் தகுதி குறித்துப் புதிய சர்ச்சை வெடித்துள்ளது. சிறந்த விளையாட்டு வீரர்கள் பிரிவுத் தேர்தலில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இந்திய ஐஸ் ஹாக்கி கூட்டமைப்பின் பெண் பிரதிநிதியாகத் தற்காலிக வாக்காளர் பட்டியலில் பி.டி. உஷாவின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால், சம்பந்தப்பட்ட கூட்டமைப்பில் உறுப்பினராக இல்லாத பி.டி. உஷாவை எவ்வாறு பிரதிநிதியாகப் பரிந்துரைக்க முடியும் எனக் கேள்வி எழுப்பி, தேர்தல் அதிகாரி சஞ்சய் குமார் ஸ்ரீவஸ்தவாவிடம் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் அதுல் குமார் அதிகாரப்பூர்வமாக ஆட்சேபனைத் தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஐஸ் ஹாக்கி வழியில் நுழைவு
சிறந்த வீரர்கள் பிரிவில் தோல்வியு
இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் பொதுக்குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்படுவதற்காக நடைபெற்ற சிறந்த விளையாட்டு வீரர்கள் பிரிவுத் தேர்தலில், மகளிர் பிரிவில் பி.டி. உஷா 40 வாக்குகள் மட்டுமே பெற்று 5-வது இடத்திற்குத் தள்ளப்பட்டார்.
அஞ்சு பாபி ஜார்ஜ் (53), ராணி ராம்பால் (50), டோலா பானர்ஜி (45) மற்றும் சாய்னா நேவால் (43) ஆகிய முதல் நான்கு இடங்களைப் பிடித்தவர்கள் மட்டுமே தகுதி பெற்றதால், பொதுக்குழுவிற்குள் நுழையும் வாய்ப்பை உஷா இழந்தார்.
இதனையடுத்து, தனது மறுதேர்தல் வாய்ப்பைத் தக்கவைத்துக்கொள்ளும் வகையில், இந்திய ஐஸ் ஹாக்கி கூட்டமைப்பின் பெண் பிரதிநிதியாக ஹர்ஜிந்தர் சிங்குடன் இணைந்து தற்காலிக வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இடம்பெற்றுள்ளது.
உறுப்பினர் தகுதி
உறுப்பினர் தகுதியும் ஐஸ் ஹாக்கி கூட்டமைப்பின் கோஷ்டி பூசல்
இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் 2026-ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 10.4-ன்படி, தேசிய விளையாட்டுக் கூட்டமைப்புகளால் பரிந்துரைக்கப்படும் பிரதிநிதிகள் அந்தந்தக் கூட்டமைப்புகளில் கட்டாயம் உறுப்பினராக இருக்க வேண்டும்.
பி.டி. உஷா இந்திய ஐஸ் ஹாக்கி கூட்டமைப்பில் உறுப்பினரே இல்லை என்பதால், அவரது உறுப்பினர் விண்ணப்பம், ஒப்புதல் தேதி மற்றும் படிவம் EC-1 ஆகியவற்றை முழுமையாக ஆய்வு செய்து, தகுதியற்றவராக இருப்பின் இறுதி வாக்காளர் பட்டியலில் இருந்து அவரை நீக்க வேண்டும் என வழக்கறிஞர் அதுல் குமார் வலியுறுத்தியுள்ளார்.
இந்திய ஐஸ் ஹாக்கி கூட்டமைப்பிற்குள்ளேயே குன்சாங் நம்கியால் தலைமையிலான போட்டி அணியினர், தற்போதைய நிர்வாகிகள் குர்பிரீத் சிங் பக்ஷி மற்றும் ஹர்ஜிந்தர் சிங் ஆகியோருக்கு உஷாவைப் பரிந்துரைக்கும் அதிகாரமே இல்லை என புகார் அளித்துள்ளனர்.
இறுதி பட்டியல்
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கவலை
ஏற்கனவே தேர்தல் விதிகள் குறித்து ஒலிம்பிக் சாம்பியன் அபினவ் பிந்த்ராவும், வேட்பாளர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக முன்னாள் தடகள வீராங்கனை அஸ்வினி நாச்சப்பாவும் புகார் எழுப்பியிருந்த நிலையில், தற்போது இந்த விவகாரம் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் கவனத்திற்குச் சென்றுள்ளது.
இந்திய ஒலிம்பிக் இயக்கத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் இத்தகைய நிகழ்வுகள் வருத்தமளிப்பதாகத் தெரிவித்துள்ள சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி, ஒலிம்பிக் சாசனத்தின்படி நேர்மையாகத் தேர்தலை நடத்த அறிவுறுத்தியுள்ளது.
தேர்தல் அதிகாரி சஞ்சய் குமார் ஸ்ரீவஸ்தவா ஆட்சேபனைகளை விசாரித்து நாளை (நவ. 15) இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிடவுள்ள நிலையில், பி.டி. உஷாவின் வேட்புமனு நிலைக்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.