
பஞ்சாப் கிங்ஸ் அணியின் இயக்குநர்கள் மீது ப்ரீத்தி ஜிந்தா வழக்கு; காரணம் என்ன?
செய்தி முன்னோட்டம்
பாலிவுட் நடிகையும், ஐபிஎல்லில் பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) அணியின் இணை உரிமையாளருமான ப்ரீத்தி ஜிந்தா, ஏப்ரல் 21 அன்று நடைபெற்ற அணி நிர்வாகத்தின் சர்ச்சைக்குரிய அசாதாரண பொதுக் கூட்டம் (EGM) தொடர்பாக சக இயக்குநர்கள் மோஹித் பர்மன் மற்றும் நெஸ் வாடியா மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு சண்டிகர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது மற்றும் கூட்டத்தை நடத்துவதில் நிறுவனங்கள் சட்டம், 2013 மற்றும் செயலக விதிமுறைகளை மீறியதாகக் கூறப்படுகிறது.
பிபிகேஎஸ் அணியின் தாய் நிறுவனமான கேபிஎச் டிரீம் கிரிக்கெட் பிரைவேட் லிமிடெட்டின் இயக்குநரான ப்ரீத்தி ஜிந்தா, ஏப்ரல் 10 அன்று மின்னஞ்சல் மூலம் EGMக்கு ஆட்சேபனைகளை எழுப்பியதாகக் கூறியுள்ளார்.
ஆனால் அவரது கவலைகள் புறக்கணிக்கப்பட்டன.
வழக்கு
வழக்கு தாக்கல் செய்ய காரணம்
இயக்குனர் கரண் பாலுடன் அவர் கூட்டத்தில் கலந்து கொண்ட போதிலும், EGM நடவடிக்கைகளை ரத்து செய்யுமாறு நீதிமன்றத்தை கோரியுள்ளார்.
புதிய இயக்குநராக முனீஸ் கன்னாவை நியமித்தது சர்ச்சையின் மையமாக உள்ளது, இந்த நடவடிக்கையை ப்ரீத்தி ஜிந்தா மற்றும் கரண் பால் இருவரும் எதிர்க்கின்றனர்.
கன்னா தனது இயக்குநர் பதவியில் செயல்படுவதைத் தடுக்கவும், சர்ச்சைக்குரிய கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட எந்த முடிவுகளையும் அமல்படுத்துவதற்கு தடை விதிக்கவும் உத்தரவிட வேண்டும் என ப்ரீத்தி ஜிந்தா நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தானும் கரண் பாலும் இல்லாமல் எதிர்கால வாரியம் அல்லது பொதுக் கூட்டங்களை கேபிஎச் டிரீம் கிரிக்கெட் நடத்துவதைத் தடுக்க வேண்டும் என்று ஜிந்தா நீதிமன்றத்தை வலியுறுத்தியுள்ளார்.
ஆதரவு
அணிக்கு ஆதரவு
சட்ட சிக்கல்கள் தீர்க்கப்படும் வரை கன்னாவை அனைத்து நிறுவன விவகாரங்களிலிருந்தும் விலக்கி வைக்க அவர் முயல்கிறார்.
இதற்கிடையே அணியின் உரிமையாளர் குழுவில் பிரச்சினை இருந்தாலும், கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரின் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு, அனைத்து போட்டிகளிலும் ஆதரவளித்து வருகிறார்.
11 ஆண்டுகளுக்கு பிறகு, பஞ்சாப் கிங்ஸ் அணி இந்த முறை பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.