பிரக்ஞானந்தாவின் வெற்றியை தீர்மானிக்கும் டை-பிரேக்கர் போட்டியின் விதிகள்
செஸ் உலகக் கோப்பை 2023 இறுதிப்போட்டியின் இரண்டு சுற்று ஆட்டங்களும் டிராவில் முடிந்த நிலையில், வியாழக்கிழமை (ஆகஸ்ட்24) நடக்கும் டை-பிரேக்கர் சுற்றில் வெற்றியாளர் தீர்மானிக்கப்பட உள்ளார். முன்னதாக, பிரக்ஞானந்தா மற்றும் மேக்னஸ் கார்ல்சன் இடையே செவ்வாய்க்கிழமை நடந்த இறுதிப்போட்டியின் முதல் சுற்று ஆட்டம் 35 நகர்வுகளுக்கு பிறகு டிராவில் முடிந்தது. இதன் பின்னர் புதன்கிழமை நடந்த இரண்டாவது சுற்று ஆட்டம் 30 நகர்களுடன் டிராவில் முடிக்கப்பட்டதால், அடுத்து டை-பிரேக்கர் என்ற குறுகிய வடிவத்தில் ஆட்டம் விளையாடப்பட உள்ளது. டை-பிரேக்கர் என்பது ரேபிட் மற்றும் பிளிட்ஸ் வடிவத்தில் விளையாடப்படும் ஆட்டமாகும். இதில் இரு வீரர்களுக்கும் 25 நிமிட நேரக்கட்டுப்பாடு இருக்கும். மேலும் நகர்வு 1ல் தொடங்கி ஒவ்வொரு நகர்வுக்கும் 10 வினாடிகள் அதிகரிப்பு கிடைக்கும்.
ரேபிட் மற்றும் பிளிட்ஸில் கார்ல்சனை மூன்று முறை தோற்கடித்துள்ள பிரக்ஞானந்தா
25 நிமிட டை-பிரேக்கரில் யாருக்கும் வெற்றி கிடைக்கவில்லை என்றால், மேலும் 10 நிமிடங்கள் கொண்ட இரண்டு ஆட்டங்களில் விளையாடுவார்கள். அதுவும் வெற்றியாளரை உருவாக்கத் தவறினால், மேலும் இரண்டு கேம்கள் விளையாடப்படும். ஆனால் இப்போது நேரம் ஒரு வீரருக்கு 5 நிமிடங்களாக குறைக்கப்படும். போட்டி இன்னும் சமநிலையில் இருந்தால், டைபிரேக்கின் பிளிட்ஸ் பகுதி 3 நிமிட நேரக்கட்டுப்பாட்டுடன் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும். ஒருவர் வெற்றி பெறும் வரை இது தொடர்ந்து நடைபெறும். இருவரில் கார்ல்சன் அதிக அனுபவம் கொண்டவராக இருந்தாலும், கடந்த ஆண்டில் ரேபிட் மற்றும் பிளிட் போட்டியில் பிரக்ஞானந்தா மூன்று முறை கார்ல்சனை வீழ்த்தியுள்ளார்.