2036 ஒலிம்பிக் இந்தியாவில்? 72வது தேசிய வாலிபால் போட்டியைத் தொடங்கி வைத்த பிரதமர் மோடி அதிரடி பேச்சு
செய்தி முன்னோட்டம்
வாரணாசியில் நடைபெற்று வரும் 72வது தேசிய வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியைப் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் இந்தியாவின் விளையாட்டு எதிர்காலம் குறித்து பேசிய பிரதமர், "வாலிபால் என்பது ஒருவருக்கொருவர் ஒத்துழைத்து விளையாடும் விளையாட்டு. இது மனவலிமையையும் குழு உணர்வையும் பிரதிபலிக்கிறது. 28 மாநிலங்களில் இருந்து வந்துள்ள வீரர்கள் 'ஒரே பாரதம், உன்னத பாரதம்' என்ற தத்துவத்திற்குச் சிறந்த உதாரணமாகத் திகழ்கின்றனர்." என்று பாராட்டினார்.
ஒலிம்பிக்
2036 ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியா தயார்
இந்தியாவின் விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகள் உலகத் தரத்திற்கு உயர்ந்துள்ளதாக பேசிய பிரதமர் மோடி, 2036 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்கான ஏலத்தில் பங்கேற்க இந்தியா தீவிரமாகத் தயாராகி வருகிறது என்று அவர் அறிவித்தார். கடந்த பத்து ஆண்டுகளில் பிஃபா யு17 உலகக் கோப்பை, ஹாக்கி உலகக் கோப்பை மற்றும் பல்வேறு சதுரங்கத் தொடர்கள் உட்பட 20க்கும் மேற்பட்ட சர்வதேசப் போட்டிகளை இந்தியா வெற்றிகரமாக நடத்தியுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். 2030 ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளும் இந்தியாவில் நடைபெற உள்ளதை அவர் நினைவு கூர்ந்தார்.
வாரணாசி
வாரணாசியில் விளையாட்டுப் புரட்சி
இந்தத் தொடக்க விழாவில் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் துணை முதலமைச்சர் பிரஜேஷ் பாடக் ஆகியோர் கலந்து கொண்டனர். மொத்தம் 58 அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்கின்றன. இந்தத் தொடர் வரும் ஜனவரி 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. வாரணாசி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில், காசிக்கு வந்துள்ள அனைத்து வீரர்களையும் வரவேற்பதாகப் பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். பிரதமரின் இந்த உரை இந்திய விளையாட்டு வீரர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒலிம்பிக் கனவை நனவாக்க அரசு எடுத்து வரும் இத்தகைய நடவடிக்கைகள் இந்தியாவின் விளையாட்டு வரலாற்றில் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.