
டி20 கிரிக்கெட் தோற்றத்திற்கு காரணமே நீங்கதான்; 1996 உலகக்கோப்பை வென்ற இலங்கை அணியுடன் பேசிய பிரதமர் மோடி
செய்தி முன்னோட்டம்
பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைக்கு சனிக்கிழமை (ஏப்ரல் 5) சென்றபோது, 1996 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இலங்கை கிரிக்கெட் அணியுடன் கலந்துரையாடினார்.
சனத் ஜெயசூர்யா, சமிந்தா வாஸ், அரவிந்த டி சில்வா மற்றும் ரொமேஷ் கலுவிதாரண உள்ளிட்ட அந்த அணியின் பிரபல உறுப்பினர்களுடன் உரையாடும் போது, டி20 கிரிக்கெட்டின் தோற்றத்திற்கு அந்த 1996 உலகக்கோப்பையில் அவர்கள் விளையாடிய விதமே தொடக்கம் எனக் கூறி அதன் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
1996 ஆம் ஆண்டு போட்டியின் போது பேட்டிங்கில் இலங்கை அணியின் தனித்துவமான மற்றும் அச்சமற்ற அணுகுமுறையைப் பாராட்டிய மோடி, "டி20களின் பிறப்பு அந்தப் போட்டியில் நீங்கள் விளையாடிய விதத்திலிருந்தே ஏற்பட்டது என்று நான் நம்புகிறேன்" என்று குறிப்பிட்டார்.
உலகளாவிய தாக்கம்
உலகளாவிய கிரிக்கெட்டில் தாக்கத்தை ஏற்படுத்திய இந்தியா, இலங்கை
இந்திய கிரிக்கெட் அணியின் 1983 மற்றும் இலங்கையின் 1996 ஆம் ஆண்டு உலகக் கோப்பை வெற்றிகள் சர்வதேச கிரிக்கெட்டை மாற்றுவதில் உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக பிரதமர் கூறினார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்திய-இலங்கை உறவுகளைப் பற்றிப் பேசிய பிரதமர் மோடி, குண்டுவெடிப்பு இருந்தபோதிலும் 1996 ஆம் ஆண்டு சுற்றுப்பயணத்தைத் தொடர இந்தியா எடுத்த முடிவை நினைவு கூர்ந்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான விளையாட்டுத் திறன் மற்றும் நட்புறவின் நீடித்த உணர்வை அடிக்கோடிட்டுக் காட்டினார்.
இந்த சந்திப்பின்போது யாழ்ப்பாணத்தில் தரமான கிரிக்கெட் மைதானத்தை உருவாக்குவதில் இலங்கை வீரர்கள் இந்தியாவின் ஆதரவைக் கோரினர்.
சமீபத்திய பொருளாதார நெருக்கடியின் போது இந்தியாவின் உதவிக்கும் அவர்கள் நன்றி தெரிவித்தனர்.