பிசிசிஐக்கு 38.5 சதவீதம்; ஐசிசி வருவாய் மாதிரியால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிருப்தி
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) 2024-27 சுழற்சிக்கான 600 மில்லியன் டாலர் வருவாயில் உறுப்பு நாடுகளுக்கான பங்கு சதவீதத்தை அறிவித்ததில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஐசிசி அறிவித்துள்ள வருமான விகிதத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) 230 மில்லியன் அமெரிக்க டாலர்களை பெறுகிறது. இது ஒட்டுமொத்த ஐசிசி வருவாயில் 38.5 சதவீதமாக இருக்கும். மறுபுறம், பிசிபி 34.51 மில்லியன் மட்டுமே பெறுகிறது. இது ஒட்டுமொத்த தொகையில் வெறும் 5.75 சதவீதமே ஆகும். பிசிபியின் பங்கு முன்பு ஈட்டிய தொகையை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகரித்தாலும், வருவாயின் பங்கை தீர்மானிக்கும் தற்போதைய முறை குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தியது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிக்கை
வருமான பங்கை தீர்மானிக்கும் முறை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், வருமான விநியோக முறைகள் சரியான கணக்கீட்டின்படி நடக்கவில்லை என தெரிய வருவதால், அத்தகைய குறிப்பிடத்தக்க முடிவை அவசரமாக எடுக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளது. மேலும், இந்த வருவாய் மாதிரியின் ஒப்புதலுக்கான வாக்களிப்பு செயல்முறையை அடுத்த ஐசிசி கூட்டத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் என்று பிசிபி முன்மொழிந்தது. இருப்பினும், மற்ற உறுப்பினர்கள் பாகிஸ்தான் வாரியத்தின் பரிந்துரையை ஏற்காததால், ஐசிசி ஒப்புதல் அளித்துள்ளது. பிசிபி வருவாய் மாதிரியுடன் உடன்படவில்லை என்றாலும், முன்பு பெற்ற பணத்தை விட இரண்டு மடங்கு சம்பாதிக்கும் என்பதை வரவேற்றுள்ளது. இதனுடன், ஆசிய கோப்பையின் ஹைப்ரிட் மாடலுக்கான அட்டவணை இந்த வாரம் வெளியிடப்படும் என்பதையும் பிசிபி உறுதிப்படுத்தியது.