தொடர்ச்சியாக 3 முறை; டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் ஆஸ்திரேலிய கேப்டன் ஆனார் பாட் கம்மின்ஸ்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ், பாகிஸ்தானுக்கு எதிரான பிங்க் டெஸ்ட் போட்டியில் அபாரமாக விளையாடி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சிட்னியில் புதன்கிழமை (ஜனவரி 3) தொடங்கிய இந்த போட்டியின் முதல் நாளில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது. 77.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணி முதல் இன்னிங்சில் 313 ரன்கள் சேர்த்தது. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் பேட்டர் முகமது ரிஸ்வான் 88 ரன்களை எடுத்தார். மேலும், பேட்டிங் ஆல்ரவுண்டர் அமீர் ஜமால் 82 ரன்கள் சேர்த்தார். ஆஸ்திரேலிய அணியில் சிறப்பாக பந்துவீசிய பாட் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பாட் கம்மின்ஸ் சாதனை
முன்னதாக, மெல்போர்னில் நடந்த முந்தைய பாக்சிங் டே டெஸ்டில் பாட் கம்மின்ஸ் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிராக இரண்டு இன்னிங்ஸ்களிலும் தலா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இதன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக மூன்று இன்னிங்ஸ்களில் ஐந்து விக்கெட் வீழ்த்திய ஆஸ்திரேலிய கிரிக்கெட் கேப்டன் என்ற சாதனையை பாட் கம்மின்ஸ் படைத்துள்ளார். மேலும், ஒட்டுமொத்தமாக இந்த நூற்றாண்டில் டெஸ்டில் தொடர்ச்சியாக ஒன்றுக்கு மேற்பட்ட இன்னிங்ஸ்களில் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றிய நான்காவது ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் ஆனார். இதற்கு முன்பாக ஷேன் வார்ன் (2004இல் 4), ஸ்டூவர்ட் மேக்கில் (2003இல் 3), மிட்செல் ஸ்டார்க் (2016இல் 3), மற்றும் நாதன் லியான் (2017இல் 3) ஆகியோர் மட்டுமே இந்த சாதனையை செய்துள்ளனர்.