'விமர்சனங்கள் குறித்து கவலையில்லை' : ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ்
ஆஷஸ் 2023 தொடரில் விளையாடி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி எட்ஜ்பாஸ்டன் மற்றும் லார்ட்ஸில் இரண்டு கடினமான வெற்றிகள், லீட்ஸில் ஒரு தோல்வி மற்றும் மான்செஸ்டரில் ஒரு டிராவை என நான்கு போட்டிகள் முடிவில் 2-1 என முன்னிலையில் உள்ளது. இதற்கிடையே, கடைசியாக நடந்த மான்செஸ்டர் போட்டியில், ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸின் திட்டமிடல் மிக மோசமாக இருந்ததாக, அவர் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தன் மீதான விமர்சனங்கள் குறித்து தனக்கு எந்த கவலையும் இல்லை என்றும், இது போன்ற விஷயங்களை கடந்து செல்ல வேண்டும் என பாட் கம்மின்ஸ் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலிய கேப்டன்ஷிப் பொறுப்பிலிருந்து விலகுவது குறித்து பாட் கம்மின்ஸ் கருத்து
பாட் கம்மின்ஸ் தான் ஒரு வீரராக ஓய்வு பெறுவதற்கு முன்பு அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிவிடுவேன் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து கூறுகையில், "இது ஒரு அடுக்கு வாழ்க்கை என்று நான் நினைக்கிறேன். நான் பதவியிலிருந்து விலகுவதற்கு தேதி வைக்க மாட்டேன். ஒவ்வொரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் நான் கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொள்வதைப் போல உணர்கிறேன். அணி மற்றும் ஊழியர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்." எனத் தெரிவித்துள்ளார். நடப்பு ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே கோப்பையைத் தக்க வைத்துக் கொண்டாலும், இங்கிலாந்தில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஆஷஸ் தொடரை வெல்ல தனது அணி இன்னும் ஆர்வமாக உள்ளது என்று கேப்டன் கம்மின்ஸ் வலியுறுத்தியுள்ளார்.