இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து பேட் கம்மின்ஸ், டேவிட் வார்னர் விலகல்?
பார்டர்-கவாஸ்கர் டிராபியின் மூன்றாவது மற்றும் நான்காவது போட்டியில் இருந்து பேட் கம்மின்ஸ், டேவிட் வார்னர் விலகிய நிலையில், மார்ச் 17 ஆம் தேதி தொடங்க உள்ள ஒருநாள் தொடரிலும் அவர்கள் பங்கேற்க வாய்ப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது. பார்டர்-கவாஸ்கர் டிராபியின் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் வியாழக்கிழமை (மார்ச் 9) தொடங்கி நடந்து வருகிறது. பேட் கம்மின்ஸ் இன்னும் ஆஸ்திரேலியாவில் இருப்பதால், இதில் ஸ்டீவ் ஸ்மித் ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டனாக செயல்படுகிறார். நடந்துகொண்டிருக்கும் தொடரில் மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு முதல் வெற்றியை பெற்றுக் கொடுத்த ஸ்மித், இந்த போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை சமன் செய்வார் என ஆஸ்திரேலிய ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
பேட் கம்மின்ஸ் மற்றும் டேவிட் வார்னர் திரும்புவது சந்தேகம்
கம்மின்ஸ் தனது தாயின் உடல்நிலை இன்னும் குணமடையாததால், மார்ச் 17 ஆம் தேதி தொடங்கும் இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை அவர் புறக்கணிப்பார் என்றும் கூறப்படுகிறது. கம்மின்ஸைத் தவிர, டெல்லியில் நடந்த இரண்டாவது டெஸ்டில் முழங்கை எலும்பு முறிவு மற்றும் மூளையதிர்ச்சி காரணமாக வெளியேறிய டேவிட் வார்னரும் ஒருநாள் சுற்றுப்பயணத்தை இழக்க வாய்ப்புள்ளது. அக்டோபரில் இந்தியாவில் நடைபெறவிருக்கும் ஒருநாள் உலகக் கோப்பைக்கு வீரர்களின் தகுதியை உறுதி செய்வதற்காக காயமடைந்த வீரர்களை விரைவாக களத்திற்கு அனுப்ப ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விரும்பவில்லை எனத் தெரிகிறது. வார்னரைத் தவிர, க்ளென் மேக்ஸ்வெல் மற்றும் மிட்செல் மார்ஷ் காயங்களில் இருந்து மீண்டு வந்தாலும், அவர்களும் இடம் பெறுவது சந்தேகம் தான் எனக் கூறப்படுகிறது.