Loading...
2028 மகளிர் டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தான் நடத்துகிறது; இந்திய போட்டிகள் அமீரகத்தில் நடக்க வாய்ப்பு
2028 மகளிர் டி20 உலகக் கோப்பையை பாகிஸ்தான் நடத்தும் என ஐசிசி அறிவித்துள்ளது.

2028 மகளிர் டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தான் நடத்துகிறது; இந்திய போட்டிகள் அமீரகத்தில் நடக்க வாய்ப்பு

எழுதியவர் Vasuki
Oct 24, 2026
01:10 pm

செய்தி முன்னோட்டம்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, 2028-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் பெற்றுள்ளது. இத்தொடர் 2028 செப்டம்பர் 7 முதல் அக்டோபர் 1 வரை நடைபெறவுள்ள நிலையில், இரு நாடுகளுக்கு இடையேயான அரசியல் பதற்றம் மற்றும் பாதுகாப்பு காரணங்களால் இந்திய மகளிர் அணி பாகிஸ்தானுக்குப் பயணம் செய்யாது என்பது உறுதியாகியுள்ளது. இதனால் இந்திய அணி பங்கேற்கும் அனைத்து லீக் மற்றும் நாக்-அவுட் ஆட்டங்களும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடுநிலையான மைதானத்தில் நடத்தப்பட அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடுநிலையான இடம்

தொடரும் 'ஹைப்ரிட் மாடல்' நடைமுறை

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நிலவும் சூழல் காரணமாக, இருதரப்புத் தொடர்கள் மட்டுமின்றி பலதரப்பு ஐசிசி தொடர்களிலும் கடந்த சில ஆண்டுகளாக ஹைப்ரிட் மாடல் முறை பின்பற்றப்பட்டு வருகிறது.

கடந்த 2025-ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற்ற ஆடவர் சாம்பியன்ஸ்டிராபி தொடரில் பங்கேற்க இந்திய அணி அங்கு செல்ல மறுத்ததால், இந்திய அணி ஆடிய அனைத்துப் போட்டிகளும் துபாயில் நடத்தப்பட்டு, இறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.

2025-ல் இந்தியாவில் நடைபெற்ற மகளிர் ஒருநாள் உலகக்கோப்பையின் போது பாகிஸ்தான் மகளிர் அணி இந்தியா வராமல், தங்களது அனைத்து ஆட்டங்களையும் இலங்கையில் விளையாடியது.

இந்தஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற 2026 டி20 உலகக்கோப்பையிலும் பாகிஸ்தான் விளையாடிய ஆட்டங்கள் அனைத்தும் இலங்கையிலேயே நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எதிர்காலத் தொடர்கள்

லாகூர் இறுதிப்போட்டி வாய்ப்பு

தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், இந்திய அணி இடம்பெறாத மற்ற அனைத்துப் போட்டிகளையும் லாகூர், கராச்சி போன்ற தங்களது சொந்த நாட்டு மைதானங்களிலேயே நடத்தத் திட்டமிட்டுள்ளது.

ஒருவேளை இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெறத் தவறினால், இறுதி ஆட்டத்தை லாகூரிலேயே நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.

மாறாக இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறினால் அந்தப் போட்டியும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்படும் எனத் தெரிகிறது.

இதனிடையே, 2027 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள முதல் மகளிர் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குப் பாகிஸ்தான் தகுதிபெறவில்லை.

தொடர்ந்து 2029 ஆடவர் சாம்பியன்ஸ் டிராபி தொடரை இந்தியா நடத்தவுள்ள நிலையில், அதிலும் பாகிஸ்தான் நடுநிலையான இடத்திலேயே விளையாடவுள்ளது.

ADVERTISEMENT