இலங்கையில் இரட்டை சதமடித்த முதல் பாகிஸ்தான் வீரர்; சவுத் ஷகீல் சாதனை
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சவுத் ஷகீல், இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தனது முதல் இரட்டைச் சதத்தைப் பதிவு செய்துள்ளார். முன்னதாக பாகிஸ்தான் 67/3 என்று தத்தளித்துக் கொண்டிருந்த போது பேட்டிங் செய்ய வந்த சவுத் ஷகீல் ஆகா சல்மானுடன் சேர்ந்து நிலைத்து நின்று ஆடினார். ஆகா சல்மான் 83 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டாகி வெளியேறினாலும், சவுத் ஷகீல் தனது அபார செயல்திறனை தொடர்ந்து, கடைசி வரை அவுட் ஆகாமல் 208 ரன்கள் எடுத்துள்ளார். இதன் மூலம், வெளிநாட்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்த 12வது பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை சவுத் ஷகீல் பெற்றுள்ளார். பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 461 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
ஆறாவது டெஸ்டில் இரட்டை சதம்
சவுத் ஷகீலுக்கு இது ஆறாவது டெஸ்ட் போட்டியாகும் மற்றும் வெளிநாட்டில் அவரது முதல் டெஸ்ட் போட்டியாகும். இங்கிலாந்து தொடரில் அறிமுகமான சவுத் ஷகீல், இதுவரை விளையாடியுள்ள 11 இன்னிங்ஸ்களில் 37, 76, 63, 94, 23, 53, 22, 55, 125*, 32, மற்றும் 200* ரன்களை பதிவு செய்து அபார ஃபார்மில் உள்ளார். இதன் மூலம் 11 இன்னிங்ஸ்களில் 7 முறை அரைசதத்தை கடந்துள்ளார். இதற்கிடையே, சவுத் ஷகீல் இலங்கையில் டெஸ்ட் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த முதல் பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.