பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஆசிப் அப்ரிடிக்கு இரண்டு ஆண்டுகள் தடை!
பிசிபியின் ஊழல் தடுப்பு சட்டத்தை மீறியதற்காக பாகிஸ்தானின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஆசிப் அப்ரிடி கிரிக்கெட்டிலிருந்து இரண்டு ஆண்டுகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இரண்டு தனித்தனி விவகாரங்களில் அவர் குற்றவாளி என கண்டறியப்பட்டுள்ளது. செப்டம்பர் 12, 2022 அன்று அப்ரிடி தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், அதே தேதியில் இருந்து தடை அமலுக்கு வருகிறது. அப்ரிடியின் விதி மீறல்கள் 2022 பாகிஸ்தான் கோப்பையில் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. அங்கு அவர் இறுதியில் இரண்டாம் இடத்தைப் பிடித்த கைபர் பக்துன்க்வாவுக்காக விளையாடினார். இந்த குற்றங்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்படும் என்றாலும், அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கோரியது மற்றும் கடந்த கால சாதனைகளை கருத்தில் கொண்டு பிசிபி அவரது தண்டனையை தளர்த்தியதாக தெரிகிறது.
கிரிக்கெட்டில் ஆசிப் அப்ரிடியின் பெர்ஃபார்மான்ஸ்
36 வயதான அப்ரிடி, இதுவரை 35 முதல் தர போட்டிகளில் விளையாடி 25.37 சராசரியில் 118 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் 7 முறை ஏழு முறை ஐந்து விக்கெட்டுகளையும், இரண்டு முறை 10 விக்கெட்டுகளையும் எடுத்து சாதனை படைத்துள்ளார். லிஸ்ட்-ஏ கிரிக்கெட்டில், அவர் 42 ஆட்டங்களில் 31.03 சராசரியை 59 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதில் இரண்டு முறை ஐந்து விக்கெட்டுகளை எடுத்துள்ளார். மேலும் அவர் 65 டி20 போட்டிகளில் 63 விக்கெட்டுகளை 6.97 என்ற எகானமி விகிதத்தில் வீழ்த்தியுள்ளார். இதிலும் ஒருமுறை ஐந்து விக்கெட் எடுத்துள்ளார். திறமையான வீரராக இருந்தாலும், இவருக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் இதுவரை விளையாட வாய்ப்பே கிடைக்கவில்லை.