LOADING...
ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை: அரசியல் பதற்றம் காரணமாக போட்டியில் இருந்து பாகிஸ்தான் விலகல்
2025 தொடரில் இருந்து பாகிஸ்தான் ஜூனியர் ஹாக்கி அணி விலகுவதாக அறிவித்துள்ளது

ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை: அரசியல் பதற்றம் காரணமாக போட்டியில் இருந்து பாகிஸ்தான் விலகல்

எழுதியவர் Venkatalakshmi V
Oct 24, 2025
03:17 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் நடைபெறவிருக்கும் FIH ஆண்கள் ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை 2025 தொடரில் இருந்து பாகிஸ்தான் ஜூனியர் ஹாக்கி அணி விலகுவதாக அறிவித்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையேயான தற்போதைய அரசியல் பதற்றம் மற்றும் பாதுகாப்பு அபாயங்கள் காரணமாக இந்த முடிவை எடுத்ததாக பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளனம் (PHF) தெரிவித்துள்ளது. சர்வதேச ஹாக்கி சம்மேளனம் (FIH) இந்த விலகலை உறுதிப்படுத்தியுள்ளதுடன், விரைவில் பாகிஸ்தானுக்குப் பதிலாக வேறொரு மாற்று அணியை அறிவிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

காரணங்கள்

விலகலுக்கான முக்கிய காரணங்கள்

பாகிஸ்தான் அரசு மற்றும் விளையாட்டு வாரியத்தின் ஆலோசனையை பெற்ற பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய அரசியல் பதற்றமான சூழ்நிலையில், ஜூனியர் அணியை இந்தியாவுக்கு அனுப்புவது பெரிய பாதுகாப்பு அபாயத்தை ஏற்படுத்தும் என்று அவர்கள் கருதுகின்றனர். இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான விளையாட்டு உறவுகள் மிகவும் மோசமடைந்துள்ள நிலையில், குறிப்பாக அண்மையில் நடந்த ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது, இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்தது போன்ற சம்பவங்கள், இந்தியாவில் எதிர்மறையான உணர்வுகள் நிலவுவதாக பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளன அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். நடப்பு ஆண்டில், இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் விலகும் இரண்டாவது பெரிய சர்வதேச ஹாக்கி நிகழ்வு இதுவாகும். முன்னதாக, ஆசியக் கோப்பை ஹாக்கி போட்டியிலிருந்தும் பாகிஸ்தான் விலகியது குறிப்பிடத்தக்கது.