இந்தியா, இலங்கையிடம் தொடர் தோல்வியால் தரவரிசையில் முதலிடத்தை இழந்தது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி
நடந்துகொண்டிருக்கும் ஆசிய கோப்பையில் ஏமாற்றமளிக்கும் வகையில், வியாழனன்று (செப்டம்பர் 14) இலங்கையிடம் தோல்வி அடைந்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. இந்நிலையில், சூப்பர் 4 சுற்றில் இந்தியா மற்றும் இலங்கையிடம் பெற்ற தோல்வி மூலம் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் தனது முதலிடத்தையும் இழந்துள்ளது. ஐசிசி தரவரிசையில் பாகிஸ்தான் அணி தற்போது 115 ரேட்டிங் புள்ளிகளுடன் இரண்டு இடங்கள் சரிந்து 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ள நிலையில், 118 ரேட்டிங் புள்ளிகளுடன் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் ஆஸ்திரேலியா புதிய நம்பர் 1 நாடாக மாறியுள்ளது. மேலும், இலங்கைக்கு எதிரான பாகிஸ்தான் தோல்வியால், இந்தியா 116 புள்ளிகளுடன் தரவரிசையில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறவும் உதவியுள்ளது.
ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் செயல்பாடு
உலகின் நம்பர் 1 ஒருநாள் கிரிக்கெட் அணியாக 2023 ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் அணி நுழைந்தது. முல்தானில் உள்ள முல்தான் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேபாளத்தை 238 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, தங்கள் ஆசிய கோப்பை பிரச்சாரத்தை வெற்றியுடன் தொடங்கினாலும், இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது போட்டி மழையால் ரத்தானது. அதன் பிறகு, சூப்பர் 4 சுற்றில் வங்கதேசத்தை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த நிலையில், இந்தியா மற்றும் இலங்கையிடம் அடுத்தடுத்து தோல்வியைத் தழுவியது. இதனால் இரண்டு முறை ஆசிய கோப்பை சாம்பியனான பாகிஸ்தான் உலக நம்பர் 1 கிரீடத்தை இழந்தது மட்டுமல்லாமல், ஆசிய கோப்பையில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பையும் இழந்தது.