பாகிஸ்தானில் ஆசிய கோப்பை : இந்தியா பங்கேற்பது உறுதி! ஆனால் ஒரு ட்விஸ்ட்!
ஆசிய கோப்பை 2023 தொடர்பான இந்தியா-பாகிஸ்தான் மோதல் முடிவுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2023 ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை போட்டியை பாகிஸ்தான் நடத்த உள்ள நிலையில், போட்டி பாகிஸ்தானில் நடந்தால் இந்தியா பங்கேற்காது என அறிவிக்கப்பட்டது. இதனால் போட்டியை நடுநிலையான மைதானத்திற்கு மாற்ற வேண்டும் என பிசிசிஐ வலியுறுத்தி வந்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. இந்திய அணி ஆசிய கோப்பைக்காக பாகிஸ்தான் வராவிட்டால், 2023 ஒருநாள் உலகக்கோப்பையில் விளையாட தங்கள் அணியை இந்தியாவுக்கு அனுப்ப மாட்டோம் என முரண்டு பிடித்தது. இந்நிலையில், பிசிசிஐ மற்றும் பிசிபி இதற்கு ஒரு தீர்வை கண்டறிந்துள்ளதாக ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு மைதானங்களில் இந்தியா விளையாடும் போட்டிகள்
ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போவின்படி, போட்டியை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் தக்கவைப்பதோடு, போட்டித் தொடரை பாகிஸ்தானிலேயே நடத்த உள்ளது. ஆனால், இந்தியா விளையாடும் போட்டிகள் மற்றும் இந்தியா-பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிகள் மட்டும் நடுநிலை மைதானங்களில் விளையாட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன், இலங்கை மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் ஏதேனும் ஒரு இடத்தில் இந்தியா விளையாடும் போட்டிகளை நடத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது. 2023 ஆசியக் கோப்பையில் ஆறு அணிகள் பங்கேற்கும் நிலையில், இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே குழுவில் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.