ஆசிய கோப்பைக்கான அணியில் திடீர் மாற்றம் செய்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்
2023 ஆசிய கோப்பைக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் இடம் பெற்றிருந்த தயப் தாஹிர் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக சவுத் ஷகீல் சேர்க்கப்பட்டுள்ளார். முன்னதாக, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம் பெற்றிருந்த தயப் தாஹிர் அந்த தொடரில் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. இதற்கிடையே ஆப்கானிஸ்தான் தொடரின் மூலம் மீண்டும் பாகிஸ்தான் அணிக்கு சவுத் ஷகீல் திரும்பினாலும், ஒரு போட்டியில் மட்டும் விளையாடி 9 ரன்கள் எடுத்திருந்தார். இந்நிலையில், ஆசிய கோப்பைக்கான அணியின் காத்திருப்பு வீரர்களில் ஒருவராக இருந்த சவுத் ஷகீல், தற்போது 17 பேர் கொண்ட அணியின் பிரதான வீரர்களில் ஒருவராக மாறியுள்ளார். தயப் தாஹிர் அணியின் காத்திருப்பு வீரர்களில் ஒருவராக மாற்றப்பட்டுள்ளார். எனினும், இதற்கான காரணம் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை.
சவுத் ஷகீலின் கிரிக்கெட் புள்ளிவிபரங்கள்
ஜூலை 2021 இல் ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணிக்காக அறிமுகமான சவுத் ஷகீல், இதுவரை ஆறு போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். இந்த ஆறு போட்டிகளிலும் சேர்த்து 19 என்ற மோசமான சராசரியை மொத்தம் 76 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதில் ஒரே ஒரு இன்னிங்ஸில் மட்டும் அரைசதம் கடந்து 56 ரன்கள் எடுத்தார். இதனால், அணியில் சேர்க்கப்பட்டாலும், அணியின் விளையாடும் லெவனில் அவர் இடம்பெற மாட்டார் என்றும், இஃப்திகார் அகமதுக்கு பேக் அப் வீரராக அவர் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதேநேரத்தில், டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை ஏழு போட்டிகளில் விளையாடியுள்ள ஷகீல், 87.50 என்ற சராசரியில் 875 ரன்கள் குவித்துள்ளார். இதில், 13 இன்னிங்ஸ்களில் விளையாடி எட்டு முறை 50+ ஸ்கோர்களை எடுத்துள்ளார்.