NZ vs PAK: மழை குறுக்கிட DLS முறைப்படி பாகிஸ்தான் வென்றதாக அறிவிக்கப்பட்டது
ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 35வது போட்டியில் இன்று நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை செய்தன. இன்றைய போட்டியானது அரையிறுதிக்கு தகுதி பெறுவதற்கு இரு அணிகளுக்கும் முக்கியமான ஒரு போட்டியாக இருந்தது. இன்றைய போட்டிக்கான டாஸை வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் ஆடிய நியூசிலாந்து அணியில் அனைத்து பேட்டர்களும் தங்களுடைய பங்களிப்பை அளித்தனர். முக்கியமாக ரச்சின் ரவீந்திரா மற்றும் கேன் வில்லியம்சன் ஆகிய இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 200 ரன்களுக்கும் மேல் குவித்தனர். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய பேட்டர்கள் 150-கும் மேற்பட்ட ரன்ரேட்டில் ரன்களைக் குவித்து அணியில் ஸ்கோர் 401-ஐ எட்ட உதவினர்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தான்:
402 என்ற பெரிய இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரரான அப்துல்லா ஷபீக் இரண்டாவது ஓவரிலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். ஆனால், அதன் பின்பு களமிறங்கிய ஃபக்கர் ஸமான் மற்றும் பாபர் அசாம் இருவரும் விக்கெட்டை விடாமல் அதே நேரத்தில் நல்ல ரன்ரேட்டில் ரன்களைக் குவித்தனர். முக்கியமாக ஃபக்கர் ஸமான் 155 என்ற ரன்ரேட்டில் சதம் கடந்து அசத்தினார். ஆனால், இடையில் மழை குறுக்கிடவே ஆட்டம் தடைப்பட்டு, 41 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. பாகிஸ்தான் அணி 200 ரன்களைக் குவித்திருக்க மீண்டும் மழையால் ஆட்டம் தடைபடவே, DLS முறைப்படி பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஃபக்கர் ஸமானின் அதிரடி ஆட்டத்தால், இன்று நியூசிலாந்தை வென்று அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்திருக்கிறது பாகிஸ்தான்.