
BAN vs PAK: வங்கதேசத்தை எளிதாக வீழ்த்திய பாகிஸ்தான்
செய்தி முன்னோட்டம்
ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 31வது போட்டியில் இன்று பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை செய்தன.
இன்றைய போட்டிக்கான டாஸை வென்ற வங்கதேச அணியின் கேப்டன் சகிப் அல் ஹசன் முதல் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
பாகிஸ்தான் அணியின் சிறப்பான பந்துவீச்சால் முதல் 10 ஓவர்களுக்குள்ளாகவே மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறத் தொடங்கியது வங்கதேச அணி.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான லிட்டன் தாஸ், இடைவரிசை ஆட்டக்காரரான மஹ்மதுல்லா மற்றும் கேப்டன் சகிப் அல் ஹசன் ஆகியோறது நிதானமான ஆட்டத்தால் சற்று ரன் குவிப்பில் ஈடுபட்டது வங்கதேச அணி.
சிறப்பாக ஆடிய இந்த வீரர்களும் பெரிய இன்னிங்ஸை நோக்கி நகராமல் அரைசதங்களை ஒட்டியே ஆட்டமிழந்தனர்
ஒருநாள் உலகக்கோப்பை
சொதப்பிய வங்கதேச அணியின் பிற பேட்டர்கள்:
மேற்கூறிய மூன்று பேட்டர்களைத் தவிர பிற பேட்டர்கள் யாரும் சோபிக்கவில்லை. வங்கதேச முக்கிய பேட்டர்கள் அனைவருமே மிகச் சொற்ப ரன்களுக்கே ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். மெஹிடி ஹாசன் மட்டும் 25 ரன்களை குவித்திருந்தார்.
பாகிஸ்தான் அணியின் ஷாகீன் அஃப்ரிடி மற்றும் முகமது வாசிம் ஆகியோர் சிறப்பாக பந்து வீசினர். இருவருமே குறைவான எக்கானமியோடு தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
முதல் இன்னிங்ஸ் முடிவில் 45.1 ஓவர்களுக்குள்ளாகவே 204 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது வங்கதேச அணி. இதனைத் தொடர்ந்து இரண்டாவது களமிறங்கவிருந்த பாகிஸ்தான் அணிக்கு 205 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
கிரிக்கெட்
பாகிஸ்தான் சிறப்பான ஆட்டம்:
205 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான அப்துல்லா ஷபீக்கும், ஃபக்கர் ஸமானும் மிகச்சிறப்பாக வங்கதேச பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டனர்.
பந்துவீச்சைத் தொடர்ந்து பேட்டிங்கிலும் அசத்தியது பாகிஸ்தான் அணி. 20 ஓவர்கள் வரை தாக்குப்பிடித்த பாகிஸ்தான் பேட்டர்கள் இருவரும் இணைந்து 128 ரன்களைக் குவித்திருந்தனர்.
பாகிஸ்தானின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியான பிறகே முதல் விக்கெட் வீழ்ந்தது. அதனைத் தொடர்ந்து இரண்டு விக்கெட்டுகள் வீழ்ந்த போதிலும் பாகிஸ்தானின் வெற்றி அப்போதே உறுதியாவிட்டது.
பாகிஸ்தான் அணியில் வீழ்ந்த மூன்று விக்கெட்டுகளையும் வங்கதேச அணியின் மெஹிடி ஹாசனே வீழ்த்தியிருந்தார்.
இறுதியில் 32.3 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகள் இழப்பிற்கு இலக்கை சேஸ் செய்து, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் போட்டியை சுலபமாக வென்றது பாகிஸ்தான் அணி.