பாகிஸ்தான் அணியின் தோல்விகளுக்கு பாபர் அசாமை பந்தாடிய முன்னாள் பாக். வீரர்கள்
கடந்த அக்டோபர் 23ம் தேதி நடைபெற்ற ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 282 ரன்களை டிஃபெண்டு செய்ய முடியாமல், நடப்பு உலக கோப்பைத் தொடரில் தங்களுடைய மூன்றாவது தோல்வியைப் பதிவு செய்தது பாகிஸ்தான். இந்த உலக கோப்பைத் தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனான மூன்றாவது மற்றும் நான்காவது போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியிருந்தது பாகிஸ்தான் அணி. அடுத்து பாகிஸ்தான் அணி ஆடவிருக்கும் நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பை நினைத்துக்கூட பார்க்க முடியும் என்னும் நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் பலரும் பாகிஸ்தான் அணியின் மீதும், அதன் தற்போதைய கேப்டன் பாபர் அசாமின் மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்.
பாபர் அசாமை சாடும் முன்னாள் வீரர்கள்:
வாசிம் அக்ரம், மிஷாப் உல் ஹக், ரமீஸ் ராஜா, ரஷித் லாடிஃப், முகமது ஹஃபீஸ், ஆக்யூப் ஜாவத், சோஹெய்ப் மாலிக், மொய்ன் கான் மற்றும் சோஹெய்ப் அக்தர் என பாகிஸ்தானின் முன்னாள் வீரர்கள் பலரும் பாகிஸ்தான் அணியின் தொடர் உலக கோப்பைத் தோல்விகளுக்கு பாபர் அசாமையே குற்றம் சாட்டியிருக்கின்றனர். அதிலும் ஆக்யூப் ஜாவத், பாபர் அசாமை கேப்டசியிலிருந்து நீக்கி விட்டு, பாகிஸ்தான் அணியின் ஸ்டார் வேகப்பந்து வீச்சாளர் ஷகீன் ஷா அஃப்ரிடியை கேப்டனாக நியமிக்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் 275 ரன்களுக்கு மேற்பட்ட ஸ்கோரை பாகிஸ்தான் அணி டிஃபெண்டு செய்ய தவறியதில்லை. ஆனால், தற்போது ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 282 ரன்களை டிஃபெண்டு செய்ய முடியாமல் தோல்வியைத் தழுவியிருக்கிறது.
உடற்தகுதி இல்லாத பாகிஸ்தான் வீரர்கள்:
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தானின் பவுலிங் ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லை எனவும், ஃபீல்டிங் படுமோசமாக இருந்ததாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார் பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம். மேலும், பாகிஸ்தான் அணி வீரர்கள் முறையான உணவுப் பழக்கத்தை கடைப்பிடிக்காமல் உடற்தகுதி இல்லாமல் இருப்பதாகவும் அவர் கடுமையாக விமர்சித்திருக்கிறார். பாபர் அசாமின் மெதுவான பேட்டிங் ஸ்டைலும் பாகிஸ்தான் அணியின் மொத்த ஸ்ட்ரைக் ரேட்டை பாதிப்பதோடு, அதுவே பாகிஸ்தான் அணியின் தோல்விகளுக்கு ஒரு காரணமாக அமைந்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார் முன்னாள் பாகிஸ்தான் ஆல்-ரவுண்டர் ரசாக். இந்தத் தோல்விகளைத் தொடர்ந்து வரும் அக்டோபர் 27 அன்று தங்களுடைய ஆறாவது போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது பாகிஸ்தான் அணி.