தொடக்க பார்ட்னர்ஷிப்பில் தொடரும் சிக்கல்; சரி செய்யுமா இந்திய கிரிக்கெட் அணி?
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் இன்னும் 2 போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் அணி 1-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. தொடரின் மீதமுள்ள இரண்டு போட்டிகளும் அமெரிக்காவின் புளோரிடாவில் நடைபெற உள்ளன. அமெரிக்காவில் இதுவரை விளையாடிய 4 டி20 போட்டிகளிலும் இந்தியா வெற்றியை பெற்றுள்ள நிலையில், இதிலும் வெல்லும் முனைப்புடன் உள்ளது. ஆனால், இந்திய அணியின் தொடக்க பார்ட்னர்ஷிப் தொடர்ந்து சிக்கலை எதிர்கொண்டு வருவது இந்திய அணிக்கு பின்னடைவாக உள்ளது. அடுத்த டி20 உலகக்கோப்பைக்கு இன்னும் ஒரு ஆண்டு கூட இல்லாத நிலையில், முந்தைய 2022 உலகக்கோப்பைக்கு பிறகு, இந்திய தொடக்க ஜோடியின் பார்ட்னர்ஷிப் சராசரி 13.81ஆக உள்ளது நிலைமையின் தீவிரத்தை உணர்த்துகிறது.
மூன்று முறை தொடக்க பார்ட்னர்ஷிப்பை மாற்றிய இந்தியா
2022 உலகக்கோப்பைக்கு பிறகு, இந்தியா 11 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது. இந்த காலகட்டத்தில் இந்தியா மூன்று வெவ்வேறு தொடக்க பார்ட்னர்ஷிப்களை முயற்சித்தது. எனினும் 11 போட்டிகளில் வெறும் 2 முறை மட்டுமே தொடக்க ஜோடியால் 20+ ஸ்கோர் எடுக்க முடிந்தது. நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் இஷான் கிஷன் மற்றும் ரிஷப் பந்த் தொடக்க ஜோடியாக களமிறங்கிய நிலையில், உள்நாட்டில் இலங்கை மற்றும் நியூசிலாந்து தொடர்களில் ஷுப்மான் கில் இஷான் கிஷனுடன் இணைந்தார். இது வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் தொடர்ந்த நிலையில், மூன்றாவது போட்டியில் இஷான் கிஷன் மாற்றப்பட்டு யஷஸ்வி ஜெய்ஸ்வால் கில்லுடன் சேர்க்கப்பட்டார். மூன்று முறை பார்ட்னர்ஷிப்பை மாற்றியும் எதுவும் கைகொடுக்காத நிலையில், இதை உடனடியாக சரிசெய்தாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது.