இதே நாளில் அன்று: மேற்கிந்திய தீவுகள் 2வது டி20 கோப்பையை வென்ற தினம்
2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் தேதி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் மேற்கிந்திய தீவுகள் இங்கிலாந்தை வீழ்த்தி இரண்டாவது முறையாக கோப்பையை வென்றது. போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் டேரன் சமி பந்துவீச முடிவு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜோ ரூட் 54 ரன்கள் எடுத்தார். சிறப்பாக பந்து வீசிய மேற்கிந்திய ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ மற்றும் கார்லஸ் ப்ரத்வொயிட் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.
கார்லஸ் ப்ரத்வொயிட் அதிரடியில் வீழ்ந்த இங்கிலாந்து
மேற்கிந்திய தீவுகள் அணி ஆரம்பத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 2.3 ஓவரில் 11 ரன்களுக்கு 3 விக்கெட் என தடுமாறியது. அடுத்து ஜோடி சேர்ந்த மார்லன் சாமுவேல்ஸ் மற்றும் பிராவோ பார்ட்னர்ஷிப்பில் 75 ரன்கள் எடுத்த நிலையில், பிராவோ வெளியேறினார். அடுதடுத்து வந்த ரஸ்ஸல், சமி ஒற்றை இலக்கத்தில் வெளியேற, ப்ரத்வொயிட் சாமுவேல்சனுடன் கூட்டணி அமைத்தார். கடைசி ஒரு ஓவரில் 19 ரன்கள் தேவை எனும் நிலையில் ஸ்ட்ரைக்கர் பக்கம் வந்த ப்ரத்வொயிட் முதல் 4 பந்துகளையும் சிக்சருக்கு விளாசி மேற்கிந்திய தீவுகளுக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தார். இதன் மூலம் மேற்கிந்திய தீவுகள் தனது இரண்டாவது டி20 உலகக்கோப்பையை கைப்பற்றியது.