நவீன டெஸ்ட் கிரிக்கெட்டின் அரிய நிகழ்வு; 16 வருடங்களில் முதல்முறையாக ஓய்வு நாள்; எதற்குத் தெரியுமா?
இலங்கை மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காம் நாளான சனிக்கிழமை (செப்டம்பர் 21) ஆட்டம் எதுவும் நடைபெறாது. இரு அணிகளுக்கும் இந்த நாள் அதிகாரப்பூர்வமாக ஓய்வு நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 16 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக, ஐந்து நாட்களைக் கொண்ட டெஸ்ட் போட்டியில் இடையே ஒரு ஓய்வு நாள் இடம்பெறுகிறது. ஐந்து நாள் நடக்க வேண்டிய டெஸ்ட் போட்டியில் இடையே ஒரு ஓய்வு நாளுடன் ஆறு நாளாக நடத்தப்படுவதற்கு காரணம் இலங்கையில் நடக்கும் அதிபர் தேர்தலேயாகும். சனிக்கிழமை நடைபெறும் அதிபர் தேர்தலில் இலங்கை வீரர்கள் வாக்களிப்பதற்காக இந்த நாள் ஓய்வு நாளாக மாற்றப்பட்டுள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டின் அதிசயம் : ஆறு நாள் போட்டி
ஓய்வு நாள் உட்பட ஆறு நாள் டெஸ்ட் போட்டிகள், கடந்த நூற்றாண்டில் இங்கிலாந்தில் பொதுவான ஒன்றாக இருந்தது. எனினும், இந்த நூற்றாண்டில் இத்தகைய கிரிக்கெட் போட்டிகள் மிகவும் அரிதாகவே இடம்பெற்றுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணியைப் பொறுத்தவரை, 2001இல் கொழும்பில் ஜிம்பாப்வேக்கு எதிராக இதேபோல் ஆறு நாட்கள் போட்டியில் பங்கேற்றது. 2008ஆம் ஆண்டு டாக்காவில் பங்களாதேஷ் இலங்கையுடன் விளையாடிய போது ஓய்வு நாள் கொண்டிருந்தது. இதுவே சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு நாள் கொண்ட கடைசி டெஸ்ட் போட்டியாகும். அப்போது பங்களாதேஷில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலையொட்டி ஓய்வு அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே தற்போது நடந்து வரும் போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணி இரண்டாவது இன்னிங்ஸில் நியூசிலாந்து அணியை விட 202 ரன்கள் முன்னிலையுடன் களத்தில் உள்ளது.