ஐபிஎல் 2026: ஆர்சிபி அணிக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி! நுவன் துஷாராவிற்கு என்ஓசி மறுப்பு; காரணம் இதுதான்
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2026 தொடரின் தொடக்க ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ளத் தயாராகி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சிகரமான செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. ஏற்கனவே சில முக்கிய வீரர்கள் விலகியுள்ள நிலையில், தற்போது இலங்கை வேகப்பந்து வீச்சாளர் நுவன் துஷாரா உடற்தகுதித் தேர்வில் தோல்வியடைந்து கிரிட்டிக்கலான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் வாரியம் நிர்ணயித்துள்ள கடுமையான உடற்தகுதித் தேர்வில் நுவன் துஷாரா தோல்வியடைந்துள்ளார். மொத்தம் உள்ள 29 புள்ளிகளில் குறைந்தபட்சம் 17 புள்ளிகளைப் பெற வேண்டும் என்ற நிலையில், அவர் அந்த இலக்கை எட்டவில்லை. இதன் விளைவாக, அவருக்கு ஐபிஎல் விளையாடுவதற்கான தடையில்லாச் சான்றிதழை வழங்க இலங்கை வாரியம் மறுத்துவிட்டது.
சிக்கல்
ஆர்சிபியின் வேகப்பந்து வீச்சிற்கு சிக்கல்
நடப்பு சாம்பியனான ஆர்சிபி அணி ஏற்கனவே பந்துவீச்சில் பெரும் சவால்களைச் சந்தித்து வருகிறது: யாஷ் தயாள் இந்த சீசனில் இருந்து விலகியுள்ளார். ஜோஷ் ஹேசில்வுடிற்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் இன்னும் விளையாட அனுமதி வழங்கவில்லை. துஷாரா இல்லாத நிலையில், நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேக்கப் டஃபி முதல் போட்டியில் களமிறங்க அதிக வாய்ப்புகள் உள்ளன.
துஷாரா
துஷாராவுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு
துஷாராவுக்கு இன்னும் வாய்ப்பு முடிந்துவிடவில்லை. இன்னும் 4 முதல் 5 நாட்கள் காத்திருப்பிற்குப் பிறகு அவர் மீண்டும் ஒருமுறை உடற்தகுதித் தேர்வை எதிர்கொள்ளலாம். அதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் பங்கேற்க முடியும். துஷாரா மட்டுமன்றி, மற்ற இரு முக்கிய இலங்கை வீரர்களும் ஐபிஎல் பங்கேற்பில் சிக்கல்களைச் சந்தித்து வருகின்றனர். மதீஷா பத்திரனா (கேகேஆர்) காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஏப்ரல் பாதியில் தான் அணியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. வனிந்து ஹசரங்கா (எல்எஸ்ஜி) உலகக்கோப்பையின் போது ஏற்பட்ட தசைப்பிடிப்பு காயம் காரணமாக இன்னும் பிட்னஸ் கிளியரன்ஸ் பெறாமல் உள்ளார்.