சமூக வலைதளங்கள், தொலைக்காட்சிகளை தவிர்க்க பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு அட்வைஸ்
ஆசிய கோப்பை 2023 தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், பாகிஸ்தான் மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதற்கான வாழ்வா சாவா போராட்டத்தில் உள்ளன. வியாழக்கிழமை (செப்டம்பர் 14) இரு அணிகளும் சூப்பர் 4 சுற்றில் நேருக்கு நேர் மோதும் நிலையில், இந்த போட்டியில் வெல்லும் அணி, ஞாயிற்றுக்கிழமை நடக்கும் இறுதிப்போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ளும். முன்னதாக, சூப்பர் 4 சுற்றில் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தி படுதோல்வியைக் கொடுத்திருந்தாலும், அடுத்து இலங்கையையும் வீழ்த்தியதன் மூலம், பாகிஸ்தானின் இறுதிப்போட்டி கனவை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவியது. இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா அணியில் இடம் பெற்றுள்ளவர்கள் சமூக ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சிகளைத் தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
வீரர்களை நீச்சல் குளத்திற்கு செல்ல ரமீஸ் ராஜா ஆலோசனை
ரமீஸ் ராஜா தனது யூடியூப் சேனலில் ஒரு வீடியோவில், இலங்கைக்கு எதிரான இந்தியாவின் வெற்றி பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு வியாழன் அன்று கண்டிப்பாக வெல்ல வேண்டிய மோதலுக்கு முன்னதாக நம்பிக்கையின் கதிரை அளித்துள்ளது என்று கூறினார். மேலும், "பாகிஸ்தான் அதிலிருந்து பலன் பெறுமா அல்லது இந்தியாவுக்கு எதிரான தோல்வியால் அவர்கள் உற்சாகம் குன்றியிருப்பார்களா என்பதை பார்க்க வேண்டும். வீரர்களுக்கு ஒரு ரிசர்வ் நாள் கிடைத்தது. அதில் அவர்கள் தோல்வியைப் பற்றி நினைக்காமல் ஒன்றாக சேர்ந்து பேச வேண்டும்." என்று கூறினார். பாகிஸ்தான் வீரர்களுக்கு முக்கிய ஆலோசனைகளை வழங்கிய ராஜா, வீரர்கள் நீச்சல் குளத்திற்குச் சென்று குளிர்ச்சியாக இருக்க வேண்டும் என்றும், சமூக ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் இருந்து விலகி இருங்கள் என்றும் தெரிவித்தார்.