இலங்கை வீரர்களுக்கு ஐபிஎல்லில் பங்கேற்க தடையா? இலங்கை கிரிக்கெட் வாரியம் மறுப்பு
மார்ச் 31 முதல் தொடங்கவிருக்கும் ஐபிஎல்லின் முதல் சில போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கேற்க முடியாத சூழல் உள்ளது. தற்போது நியூசிலாந்தில் இலங்கை அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதனால் வனிந்து ஹசரங்கா (ஆர்சிபி), மஹீ தீக்ஷனா மற்றும் மதீஷா பத்திரனா (சிஎஸ்கே) உட்பட மூன்று இலங்கை கிரிக்கெட் வீரர்கள் ஐபிஎல்லின் ஆரம்ப போட்டிகளில் பங்கேற்க மாட்டார்கள். பானுகா ராஜபக்சே (பஞ்சாப் கிங்ஸ்) மட்டுமே முழு சீசனிலும் பங்கேற்க உள்ளார். இந்நிலையில், இலங்கை ஊடகங்களில் வெளியான செய்திகளின்படி, பிசிசிஐ இலங்கை வீரர்கள் பங்கேற்காமல் போவதால் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்பட்டது. மேலும் இலங்கை வீரர்கள் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க தடையை எதிர்கொள்ள நேரிடும் என வெளியான செய்திகளை இலங்கை கிரிக்கெட் வாரியம் மறுத்துள்ளது.
தென்னாப்பிரிக்க வீரர்களும் பங்கேற்பதில் சிக்கல்
மார்ச் 31 மற்றும் ஏப்ரல் 2 ஆகிய தேதிகளில் நெதர்லாந்துடன் தென்னாப்பிரிக்க அணி இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இதனால் டேவிட் மில்லர், ககிசோ ரபாடா, குயின்டன் டி காக், அன்ரிச் நார்ட்ஜே, லுங்கி என்கிடி போன்ற பல தென்னாப்பிரிக்கா நட்சத்திரங்கள் ஐபிஎல் 2023 இன் முதல் சில போட்டிகளில் பங்கேற்க மாட்டார்கள். இதற்கிடையே டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் விளையாடும் வங்கதேச இடது கை வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மானும் ஐபிஎல் 2023 சீசனின் ஆரம்ப போட்டிகள் சிலவற்றை இழப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.