நியூசிலாந்து vs வங்கதேசம் 3வது ODI : 98 ரன்களில் நியூசிலாந்தை சுருட்டி வங்கதேசம் அபார வெற்றி
நியூசிலாந்து vs வங்கதேசம் இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 100 ரன்களுக்குள் நியூசிலாந்தை சுருட்டி வங்கதேசம் அபார வெற்றி பெற்றது. முன்னதாக, நியூசிலாந்தின் நேப்பியரில் உள்ள மெக்லீன் பார்க் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து பேட்டிங்கில் களமிறங்கிய நியூசிலாந்து கிரிக்கெட் அணி வங்கதேச அணியின் அபார பந்துவீச்சால் 31.4 ஓவர்களில் 98 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் வில் யங் 26 ரன்களும், கேப்டன் டாம் லாதம் 21 ரன்களும் எடுத்தனர். வங்கதேச அணியில் சிறப்பாக பந்துவீசிய சொரிஃபுல் இஸ்லாம், தன்சிம் ஹசன் ஷாகிப் மற்றும் சவும்யா சர்க்கார் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
9 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசம் வெற்றி
99 ரன்கள் எனும் எளிய இலக்குடன் வங்கதேச கிரிக்கெட் அணி களமிறங்கிய நிலையில், அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் சவும்யா சர்க்கார் வலது கண்ணில் ஏற்பட்ட பிரச்சினையால் 4 ரன்கள் எடுத்த நிலையில் மைதானத்தில் இருந்து வெளியேறினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான அனாமுல் ஹாக் 37 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானாலும், நஜ்மல் ஹுசைன் சாண்டோ கடைசி வரை அவுட்டாகாமல் 51 ரன்கள் எடுத்து அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தார். இதன்மூலம், 15.1 ஓவரில் இலக்கை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்கதேச அணிக்கு, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இது முதல் வெற்றியாகும். முன்னதாக, முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற நியூசிலாந்து தொடரை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.