2வது போட்டியிலேயே எம்எஸ் தோனியின் சாதனையை முறியடித்த நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்; என்ன சாதனை தெரியுமா?
இலங்கைக்கு எதிராக தற்போது நடந்து வரும் டி20 கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து கிரிக்கெட் அணியில் அறிமுகமாகியுள்ள மிட்ச் ஹே, தனது இரண்டாவது போட்டியிலேயே எம்எஸ் தோனியின் சாதனையை முறியடித்துள்ளார். இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது போட்டி ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 10) தம்புல்லா மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 108 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 109 ரன்கள் எனும் இலக்குடன் எளிய களமிறங்கிய இலங்கை கிரிக்கெட் அணி 103 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி தோல்வியைத் தழுவியது. இதில் நியூசிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் மிட்ச் ஹே, விக்கெட் கீப்பிங்கில் புதிய சாதனை படைத்துள்ளார்.
விக்கெட் கீப்பர் மிட்ச் ஹே சாதனை
இந்த போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக ஐந்து கேட்சுகள் மற்றும் ஒரு ஸ்டம்பிங் என விக்கெட் கீப்பராக மொத்தம் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் விக்கெட் கீப்பராக அதிக வீரர்களை ஆட்டமிழக்கச் செய்தவர் என்ற சாதனையை மிட்ச் ஹே படைத்துள்ளார். முன்னதாக, ஒரு இன்னிங்ஸில் விக்கெட் கீப்பர் ஒருவர் ஐந்து வீரர்களை ஆட்டமிழக்கச் செய்ததே சாதனையாக இருந்தது. இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் எம்எஸ் தோனி 2018இல் இங்கிலாந்துக்கு எதிராக 5 பேரை ஆட்டமிழக்கச் செய்த நிலையில், ஆப்கானிஸ்தானின் முகமது ஷாஜாத் 2015லும், கென்யாவின் இர்பான் கரீம் மற்றும் பப்புவா நியூ கினியாவின் கிப்ளின் டோரிகா ஆகியோர் 2019லும் இதே சாதனையை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.