10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் செய்யும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி
அக்டோபரில் இந்தியாவில் நடக்க உள்ள ஒருநாள் உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையில், நியூசிலாந்து கிரிக்கெட் அணி செப்டம்பர் மாதம் வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் செய்கிறது. இந்த சுற்றுப்பயணத்தில் வங்கதேச அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. முன்னதாக, நியூசிலாந்து அணி வங்கதேசத்திற்கு கடைசியாக 2013இல் சுற்றுப்பயணம் செய்த பிறகு, 10 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி செப்டம்பர் 21 ஆம் தேதி தொடங்கும் நிலையில் 23 மற்றும் 26 ஆம் தேதிகளில் அடுத்தடுத்த போட்டிகள் நடக்க உள்ளன. அனைத்து போட்டிகளும் மிர்பூரில் உள்ள ஷேர்-இ-பங்களா தேசிய கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடக்க உள்ளன.
ஒருநாள் உலகக்கோப்பைக்கு பிறகு டெஸ்ட் தொடர்
வங்கதேச கிரிக்கெட் அணியுடனான நியூசிலாந்து தொடரில் ஒருநாள் போட்டிகள் மட்டுமல்லாது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரும் நடக்க உள்ளது. எனினும், இந்த டெஸ்ட் போட்டிகள் அனைத்தும் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் முடிவடைந்த பிறகு திட்டமிடப்பட்டுள்ளன. இதன்படி முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 28 முதல் டிசம்பர் 2 வரையிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 6 முதல் 10 வரையிலும் நடக்க உள்ளன. போட்டிகளுக்கான மைதானங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளும், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25 சுழற்சியின் ஒரு பகுதியாக இருக்கும்.