சேப்பாக்கம் மைதானத்தில் கருணாநிதி பெயரில் புதிய ஸ்டேண்ட்?
எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில், கட்டப்பட்டுள்ள புதிய ஸ்டாண்டிற்கு தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயர் சூட்டப்பட உள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்க வட்டாரங்கள் (டிஎன்சிஏ) தெரிவித்தன. இந்தியாவின் மிகவும் பழமையான மைதானங்களில் ஒன்றான சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம் கடந்த 2011இல் ரூ.190 கோடியில் புனரமைக்கப்பட்டது. எனினும் அப்போது அண்ணா பெவிலியன் மற்றும் எம்சிசி பெவிலியன் ஆகியவை சீரமைக்கப்படவில்லை. 2021க்கு பிறகு இங்கு சர்வதேச போட்டிகள் நடைபெறாத நிலையில், இவற்றை புனரமைக்கும் பணிகள் ரூ.90 கோடி மதிப்பீட்டில் நடந்து வந்தன. அவற்றின் பணிகள் முடிந்து வரும் மார்ச் 17 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இவற்றை திறந்து வைக்கிறார்.
ஸ்டேடியத்திற்கு முன்னாள் முதல்வரின் பெயர்
மார்ச் 17 ஆம் தேதி, தமிழகத்தில் 5 முறை மாநில முதல்வராக இருந்த கருணாநிதியின் பெயரை, அவரது மகனும் தற்போதைய தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஒரு ஸ்டேடியத்திற்கு வைக்கிறார். இதற்கான விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உத்யநிதி ஸ்டாலின் மற்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஆகியோரும் கலந்து கொள்கின்றனர். பல ஆண்டுகளாக, டிஎன்சிஏ நிர்வாகம் திமுகவுடன் நெருங்கிய உறவை கொண்டுள்ளது மற்றும் டிஎன்சிஏவின் தற்போதைய தலைவர் டாக்டர் பி அசோக் சிகாமணி மாநிலத்தின் உயர்கல்வி அமைச்சர் கே பொன்முடியின் மகன் ஆவார். தற்போது புனரமைக்கப்பட்டுள்ள இரண்டு புதிய ஸ்டாண்டுகளுடன், ஸ்டேடியத்தில் மொத்த கொள்ளளவு சுமார் 38,000 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.