உலக தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு முதல் தங்கம்; சரித்திரம் படைத்த நீரஜ் சோப்ரா
ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 27) நடந்த தடகள உலக சாம்பியன்ஷிப் ஈட்டு எறிதல் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார். முன்னதாக, தகுதிச் சுற்றில் முதலிடம் பிடித்ததோடு, 2024 பாரிஸ் ஒலிம்பிக்கிற்கும் தகுதி பெற்ற நிலையில் இறுதிப்போட்டியில் பங்கேற்றார். இதில் முதல் முயற்சியில் தவறு செய்து பவுல் ஆன நிலையில், தனது இரண்டாவது முயற்சியில் 88.17மீ எறிந்தார். இதை வேறு எந்த வீரர்களாலும் எட்ட முடியாத நிலையில், நீரஜ் சோப்ரா முதலிடம் பிடித்து தங்கத்தைக் கைப்பற்றினார். இதற்கிடையே, நீரஜ் சோப்ராவுக்கு கடும் சவாலாக பார்க்கப்பட்ட பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் 87.82மீ தூரம் எறிந்து வெள்ளி வென்றார். மேலும், செக் குடியரசின் ஜக்குப் வாட்லெஜ் 86.67மீ தூரம் எறிந்து வெண்கலம் வென்றார்.
மூன்று பதக்கங்களை வென்ற ஒரே இந்தியர் நீரஜ் சோப்ரா
உலக தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியா இதற்கு முன்னதாக தலா ஒரு வெள்ளி மற்றும் வெண்கலம் மட்டுமே வென்றிருந்தது. இந்நிலையில், இந்த முறை நீரஜ் சோப்ரா தங்கம் வென்று, உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனை படைத்துள்ளார். மேலும், உலக தடகள சாம்பியன்ஷிப் , டயமண்ட் லீக் டிராபி மற்றும் ஒலிம்பிக் பதக்கம் ஆகிய மூன்றையும் வென்ற ஒரே இந்தியர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். இதற்கிடையே, ஈட்டி எறிதல் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இதர இந்திய வீரர்களான கிஷோர் ஜெனா மற்றும் டிபி மானு ஆகியோர் முறையே 84.77 மற்றும் 84.14 மீட்டர்கள் எறிந்து 5வது மற்றும் 6வது இடத்தைப் பிடித்தனர்.
இந்த காலவரிசையைப் பகிரவும்