
WTC Final 2023 : முதல் இன்னிங்ஸில் இந்திய அணி தடுமாற்றம்! பாலோ ஆனை தவிர்க்குமா?
செய்தி முன்னோட்டம்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வியாழன் (ஜூன் 8) அன்று இரண்டாம் நாள் முடிவில் இந்தியா 5 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் எடுத்து தத்தளித்து வருகிறது.
முன்னதாக முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்பிற்கு 327 ரன்கள் எடுத்திருந்தது.
டிராவிஸ் ஹெட் 146 ரன்களுடனும், ஸ்டீவ் ஸ்மித் 95 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
வியாழக்கிழமை இரண்டாம் நாள் தொடங்கிய நிலையில் ஸ்டீவ் ஸ்மித்தும் சதமடித்தாலும், இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டதால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
இறுதியில் 469 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. சிறப்பாக செயல்பட்ட இந்திய பந்துவீச்சாளர் முகமது சிராஜ் 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
india struggles in first innings
சொதப்பிய இந்திய பேட்ஸ்மேன்கள்
இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்கள் இன்னிங்ஸ் தொடக்கத்தில் அபாரமாக ரன் குவித்து 6 ஓவர்களில் 30 ரன்களை எடுத்து நம்பிக்கையை கொடுத்த நிலையில், 6வது ஓவரின் கடைசி பந்தில் முதல் விக்கெட்டை இழந்தது.
அதன் பின்னர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாற ஆரம்பித்த நிலையில், இரண்டாம் நாள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்களுடன் உள்ளது.
அஜிங்க்யா ரஹானே 29 ரன்களுடனும், கே.எஸ்.பாரத் 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவை விட இன்னும் 318 ரன்கள் பின்தங்கியுள்ளது.
பாலோ ஆனை தவிர்க்க 270 ரன்கள் எடுக்க வேண்டும் என்பதால், இந்தியா வெள்ளிக்கிழமை (ஜூன் 9) கடுமையாக போராடி ரன் சேர்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.