ஆஷஸ் 2023 தொடரிலிருந்து நாதன் லியான் வெளியேற்றம்
வலது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான நாதன் லியான் ஆஷஸ் 2023 தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக மாற்று வீரரை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இன்னும் அறிவிக்கவில்லை. இதன் மூலம் வியாழன் (ஜூலை 6) அன்று ஹெடிங்லியில் தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் அவருக்குப் பதிலாக சக ஆஃப்ஸ்பின்னர் டோட் மர்பி, அணியின் விளையாடும் லெவனில் இடம்பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. தற்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது.
100 டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாடி நாதன் லியான் சாதனை
நாதன் லியான் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 2) ஆஸ்திரேலியாவின் மருத்துவ ஊழியர்களைச் சந்தித்து, காயம் காரணமாக விலகுவதை உறுதிப்படுத்தினார். இதன் மூலம் 100 டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாடிய அவரது டெஸ்ட் கேரியரில் தடை ஏற்பட்டுள்ளது. லார்ட்ஸ் டெஸ்ட் நாதன் லியானுக்கு தொடர்ச்சியாக 100வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியாகும் மற்றும் ஒட்டுமொத்தமாக 122வது டெஸ்ட் போட்டியாகும். இதன் மூலம் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஆறாவது வீரர் மற்றும் இந்த சாதனையை செய்த ஒரே பந்து வீச்சாளர் ஆனார். லியான் இதுவரை காயம் காரணமாக எந்தவொரு ஒரு டெஸ்ட் போட்டியையும் தவறவிட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.