LOADING...
வங்கதேச டி20 உலகக்கோப்பை போட்டிகளை இந்தியாவில் நடத்தக் கூடாதாம்; முஸ்தாபிசுர் ரஹ்மான் ஐபிஎல் நீக்கத்தால் புலம்பல்
வங்கதேச டி20 உலகக்கோப்பை போட்டிகளை இந்தியாவில் நடத்தக் கூடாது என கோரிக்கை

வங்கதேச டி20 உலகக்கோப்பை போட்டிகளை இந்தியாவில் நடத்தக் கூடாதாம்; முஸ்தாபிசுர் ரஹ்மான் ஐபிஎல் நீக்கத்தால் புலம்பல்

எழுதியவர் Sekar Chinnappan
Jan 04, 2026
10:53 am

செய்தி முன்னோட்டம்

வங்கதேசத்தில் நிலவும் அரசியல் சூழல் மற்றும் அங்குள்ள சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் காரணமாக, இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) எடுத்துள்ள ஒரு அதிரடி முடிவு கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணிக்காக ஐபிஎல் 2026 தொடருக்கு ஏலம் எடுக்கப்பட்ட வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மானை உடனடியாக விடுவிக்குமாறு அந்த அணிக்கு பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது. ரூ.9.20 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டிருந்த முஸ்தாபிசுருக்குப் பதிலாக மற்றொரு வீரரைத் தேர்வு செய்ய கேகேஆர் அணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளைக் கண்டித்தும், பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.

எதிர்வினை

வங்கதேசத்தின் எதிர்வினை

பிசிசிஐயின் இந்த நடவடிக்கைக்கு வங்கதேச இடைக்கால அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வங்கதேச விளையாட்டுத் துறையின் இடைக்கால ஆலோசகர் ஆசிப் நஸ்ருல் தனது முகநூல் பக்கத்தில் கூறியுள்ளதன்படி, இந்தியாவில் நடைபெறவுள்ள 2026 டி20 உலகக்கோப்பையில், வங்கதேசம் விளையாடும் போட்டிகளை மட்டும் இலங்கைக்கு மாற்ற வேண்டும் என ஐசிசியிடம் கோரிக்கை விடுக்க வங்கதேச கிரிக்கெட் வாரியத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு வீரருக்கே இந்தியாவில் பாதுகாப்பு வழங்க முடியாத போது, முழு அணிக்கும் எவ்வாறு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளை வங்கதேசத்தில் ஒளிபரப்பத் தடை விதிக்கவும் அந்நாட்டு அரசு ஆலோசித்து வருகிறது.

கிரிக்கெட்

இந்தியா - வங்கதேசம் கிரிக்கெட் உறவு பாதிப்பு

வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவிருந்த இந்தியா மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகள் இடையிலான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களை பிசிசிஐ தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. டி20 உலகக்கோப்பையைப் பொறுத்தவரை, திட்டமிட்டபடி வங்கதேசம் தனது முதல் போட்டியை பிப்ரவரி 7 ஆம் தேதி கொல்கத்தாவில் விளையாட வேண்டும். ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள மோதலால் இதில் மாற்றம் ஏற்படலாம். கிரிக்கெட்டையும் அரசியலையும் கலக்கக் கூடாது என ஒரு தரப்பினரும், பாதுகாப்பும் மனித உரிமைகளும் முக்கியம் என மற்றொரு தரப்பினரும் சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர். ஐசிசி இந்த விவகாரத்தில் என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பதைப் பொறுத்தே உலகக் கோப்பை தொடரின் எதிர்காலம் அமையும்.

Advertisement