பிசிசிஐ முடிவால் முஸ்தபிசுருக்கு பல கோடி ரூபாய் நஷ்டம்: ஏலத் தொகை கிடைக்குமா?
செய்தி முன்னோட்டம்
பங்களாதேஷ் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மானின் ஒப்பந்தம் முடிவுக்கு வழிவகுத்த சூழ்நிலைகளில் அவருக்கு எந்தப் பங்கும் இல்லை என்றாலும், பிசிசிஐயின் அறிவுறுத்தலின் பேரில் அவர் KKR அணியிலிருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணி அவரை விடுவிக்கப்பட்ட பிறகு, அவருக்கு எந்த நிதி இழப்பீடும் கிடைக்க வாய்ப்பில்லை என செய்திகள் கூறுகின்றன. எனினும் இந்த முடிவு, KKR அணி எடுக்கவில்லை, மாறாக BCCI -யால் எடுக்கப்பட்டதால், வீரருக்கு இழப்பீடு வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இதற்கான பதில் தற்போது கிடைத்துள்ளது.
ஒப்பந்த தொகை
வீரரின் ஒப்பந்த தொகை பற்றி IPL விதிகள் கூறுவது என்ன?
ஐபிஎல் விதிமுறைப்படி, ஒரு வீரர் போட்டிகளில் பங்கேற்றால் மட்டுமே அவருக்கு ஒப்பந்தத் தொகை வழங்கப்படும். பொதுவாக ஒரு வீரர் காயம் காரணமாக விலகினால் காப்பீடு (Insurance) மூலம் ஓரளவிற்குப் பணம் கிடைக்கும். ஆனால், இது "பாதுகாப்பு மற்றும் ராஜதந்திர காரணங்களுக்காக" பிசிசிஐ எடுத்த முடிவு என்பதால், முஸ்தபிசுருக்கு எவ்வித நஷ்டஈடும் வழங்கப்படாது என்று கூறப்படுகிறது. இதனால், ஒரே நாளில் 9 கோடி ரூபாய்க்கும் அதிகமான வருமானத்தை அவர் இழந்துள்ளார். ஐபிஎல் தொடரில் விளையாடுவதன் மூலம் கிடைக்கும் விளம்பர ஒப்பந்தங்கள் மற்றும் பிராண்ட் மதிப்பு (Brand Value) ஆகியவையும் அவருக்குப் பறிபோயுள்ளன. இது அவரது ஒட்டுமொத்த கிரிக்கெட் வாழ்க்கையிலேயே மிகப்பெரிய நிதி இழப்பாகக் கருதப்படுகிறது.