துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் இருந்து ஆண்டி முர்ரே விலகல்
செய்தி முன்னோட்டம்
தொடர்ச்சியான இடுப்பு வலி பிரச்சினை காரணமாக துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் இருந்து பிரிட்டனை சேர்ந்த ஆன்டி முர்ரே விலகியுள்ளார் என்று போட்டி அமைப்பாளர்கள் திங்கள்கிழமை (பிப்ரவரி 27) தெரிவித்தனர்.
35 வயதான, மூன்று முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான ஆண்டி முர்ரே, ஏற்கனவே இடுப்பு வலியால் அவதிப்பட்டு வந்தார். 2019 இல் டென்னிஸ் வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் நிலைக்கு சென்றார்.
எனினும், அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் மீண்டு வந்தார். மேலும், கடந்த வார கத்தார் ஓபனில் விளையாடத் திரும்பியதோடு, அதில் இறுதிப் போட்டி வரை முன்னேறினார்.
கடைசியில் டேனியல் மெட்வெடேவால் தோற்கடிக்கப்பட்டதால், அதில் பட்டம் பெறும் வாய்ப்பை இழந்தது குறிப்பிடத்தக்கது.
ஆண்டி முர்ரே
துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் அமைப்பு அறிக்கை
துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தும் அமைப்பு தனது ட்விட்டர் பதிவில், "ஆண்டி முர்ரே இந்த ஆண்டு போட்டியில் பங்கேற்க முடியவில்லை என்பதை வருத்தத்துடன் உங்களுக்குத் தெரிவிக்கிறோம். ஆண்டி தொடர்ச்சியான இடுப்பு காயத்தை எதிர்கொண்டதால் துபாயிலிருந்து வெளியேறியுள்ளார்." எனத் தெரிவித்துள்ளது.
முன்னதாக கத்தார் ஓபனில் மெட்வெடேவிடம் தோல்வியடைந்த பிறகு, தனது உடலை சிறப்பாக நிர்வகிக்க வேண்டும் என்று முர்ரே கூறியிருந்தார்.
இதற்கிடையே, 2021 அமெரிக்க ஓபன் சாம்பியனான சக பிரிட்டன் வீராங்கனை எம்மா ரடுகானு, டான்சில்லிடிஸ் காரணமாக டெக்சாஸில் நடந்த ஆஸ்டின் ஓபனில் இருந்து நேற்று (பிப்ரவரி 26) விலகியது குறிப்பிடத்தக்கது.