சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் முரளி விஜய்!
இந்திய அணியின் மூத்த பேட்டர் முரளி விஜய், அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக திங்கள்கிழமை (ஜனவரி 30) அறிவித்தார். கடைசியாக டிசம்பர் 2018 இல் இந்தியாவுக்காக விளையாடிய முரளி விஜய், சமூக ஊடகங்களில் ஒரு உருக்கமான பதிவை வெளியிட்டு, தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "இன்று, மகத்தான நன்றியுடனும் பணிவுடனும், அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவிக்கிறேன். 2002 முதல் 2018 வரையிலான எனது பயணம் எனது வாழ்க்கையின் மிக அற்புதமான ஆண்டுகள். கிரிக்கெட்டின் மிக உயர்ந்த மட்டத்தில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெருமை எனக்கு கிடைத்தது." என தெரிவித்துள்ளார்.
முரளி விஜய் ட்வீட்
முரளி விஜயின் சர்வதேச கிரிக்கெட் புள்ளி விபரங்கள்
38 வயதான விஜய் 6 நவம்பர் 2008 அன்று இந்தியாவுக்காக சர்வதேச டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். 2010 களின் தொடக்கத்தில் இருந்து 2017 ஆம் ஆண்டு வரை இந்தியாவுக்காக டெஸ்ட் போட்டிகளில் ஒரு முக்கியமான தொடக்க பேட்டராக இருந்தார். 61 டெஸ்ட் போட்டிகளில், அவர் 12 சதங்கள் மற்றும் 15 அரைசதங்கள் உட்பட 3,982 ரன்கள் எடுத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில், அவர் இந்தியாவுக்காக 17 போட்டிகளில் விளையாடி 339 ரன்கள் எடுத்தார். இதில் ஒரே ஒரு அரை சதம் மட்டும் அடித்துள்ளார். அவர் சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக ஒன்பது போட்டிகளில் விளையாடி 169 ரன்கள் எடுத்தார். இதில் சதம் அல்லது அரைசதம் எதுவும் எடுக்கவில்லை.