ஐபிஎல் 2023 : காயத்தில் அவதிப்படும் வீரர்களால் சிஎஸ்கே, எல்எஸ்ஜி அணிகளுக்கு பின்னடைவு!
இந்திய இடது கை வேகப்பந்து வீச்சாளர்களான முகேஷ் சவுத்ரி மற்றும் மோஷின் கான் ஆகியோர் மார்ச் 31 ஆம் தேதி தொடங்கும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 இல் விளையாடுவது சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது. முகேஷ் சவுத்ரி சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியில் இடம் பெற்றுள்ள நிலையில், மோஷின் கான் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணியில் உள்ளார். க்ரிக்பஸ்ஸின் கூற்றுப்படி, இருவரும் காயத்தால் அவதிப்படுவதால், முழு சீசனையுமே இழக்க நேரிடும் எனத் தெரிகிறது. முன்னதாக சௌத்ரி மற்றும் மோஷின் இருவரும் தலா ரூ.20 லட்சம் அடிப்படை விலைக்கு வாங்கப்பட்டனர். இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களும் கடந்த சீசனில் அறிமுகமாகி தங்களுக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி இருந்தனர்.
சிகிச்சையில் உள்ள முகேஷ் சவுத்ரி மற்றும் மோஷின் கான்
பெங்களூருவின் தேசிய கிரிக்கெட் அகாடமியில் தற்போது முதுகில் ஏற்பட்ட காயத்திற்கு முகேஷ் சவுத்ரி சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவர் இந்த ஆண்டு ஐபிஎல்லில் விளையாடுவார் என தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும் இது தங்களுக்கு பேரிழப்பு என்றும் சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் கூறினார். முகேஷ் சவுத்ரி டிசம்பர் 2022 முதல் எந்த போட்டியிலும் பங்கேற்கவில்லை. இதற்கிடையே, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெற்றிகரமாக தோள்பட்டை அறுவை சிகிச்சை செய்து கொண்ட மோஷின், எல்எஸ்ஜி முகாமில் சேர்ந்து லக்னோவில் பயிற்சி செய்து வருகிறார். இருந்தாலும் எல்எஸ்ஜி அதிகாரிகள் மோஷினின் உடற்தகுதியை இன்னும் உறுதி செய்யவில்லை.