தோனி பிறந்தநாள் ஸ்பெஷல் : 77 அடி உயர கட் அவுட் வைத்து பாலாபிஷேகம் செய்த ரசிகர்கள்
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக திகழ்ந்த எம்எஸ் தோனிக்கு இன்று (ஜூலை 7) 42வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்தியாவுக்காகவும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் அவர் விளையாடிய சில முக்கியமான தருணங்களை குறிப்பிட்டு பலர் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், ஒருசிலர் தோனி மீதான தங்கள் அன்பை வெளிப்படுத்துவதில் ஒருபடி மேலே சென்றுள்ளனர். குறிப்பாக ஆந்திரப் பிரதேசத்தின் நந்திகமவில் ஜூலை 7இல் அவரது பிறந்தநாளை குறிக்கும் வகையில் 77அடி உயர கட் அவுட் வைத்துள்ளனர். சிஎஸ்கே ஜெர்சியில் தோனி இருக்கும் இந்த கட் அவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்த வீடியோவும் வெளியாகி வைரலாகி வருகிறது. இதேபோல் ஹைதராபாத்திலும் 52 அடி உயரத்திற்கு தோனியின் கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட்டின் அடையாளமாக மாறிய தோனி
எம்எஸ் தோனி எல்லா காலத்திலும் சிறந்த இந்திய கேப்டன்களில் ஒருவராகவும், ஒயிட் பால் கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராகவும் பரவலாக மதிப்பிடப்படுகிறார். டி20 உலகக்கோப்பை, ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி என ஐசிசி ஏற்பாடு செய்த மூன்று ஒயிட் பால் கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் எம்எஸ் தோனி மட்டுமே. 2009 இல் இந்திய கிரிக்கெட் அணி முதல் முறையாக டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்திற்கு ஏறியபோது அதன் கேப்டனாக இருந்ததும் எம்எஸ் தோனிதான். ஐபிஎல் வரலாற்றிலும் தனக்கென ஒரு தனி அடையாளத்தை பதித்துள்ள எம்எஸ் தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐந்து பட்டங்களை வென்று கொடுத்து வெற்றிகரமாக வழிநடத்தி வருகிறார்.