LOADING...
சிஎஸ்கே ரசிகர்களுக்குப் பேரதிர்ச்சி! காயம் காரணமாக முதல் 2 வார ஐபிஎல் போட்டிகளில் இருந்து தோனி விலகல்
ஐபிஎல் 2026இல் காயம் காரணமாக முதல் 2 வார போட்டிகளில் தோனி பங்கேற்கமாட்டார் என அறிவிப்பு

சிஎஸ்கே ரசிகர்களுக்குப் பேரதிர்ச்சி! காயம் காரணமாக முதல் 2 வார ஐபிஎல் போட்டிகளில் இருந்து தோனி விலகல்

எழுதியவர் Sekar Chinnappan
Mar 28, 2026
10:42 am

செய்தி முன்னோட்டம்

ஐபிஎல் 2026 சீசன் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்கும் அதன் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும் ஒரு வருத்தமான செய்தி வெளியாகியுள்ளது. சிஎஸ்கே அணியின் முதுகெலும்பாகக் கருதப்படும் எம்எஸ் தோனி, காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காயம் காரணமாக இந்த சீசனின் முதல் இரண்டு வாரப் போட்டிகளில் விளையாட மாட்டார் என்று அந்த அணி நிர்வாகம் இன்று (மார்ச் 28, 2026) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கூடுதல் விவரங்கள் இங்கே:-

சிஎஸ்கே அறிக்கை

தோனிக்கு ஏற்பட்ட காயம் மற்றும் சிஎஸ்கே அறிக்கை

வருகிற திங்கட்கிழமை குவஹாத்தியின் பார்சபாரா மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக சிஎஸ்கே தனது முதல் போட்டியில் களம் காண உள்ளது. இந்த சூழலில், தோனியின் காயம் குறித்த அறிக்கையை சிஎஸ்கே தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. "எம்எஸ் தோனி தற்போது தசைப்பிடிப்பு காயத்திற்காக மறுவாழ்வுப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதன் காரணமாக அவர் ஐபிஎல் 2026ன் முதல் இரண்டு வாரப் போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பில்லை. 'தல' விரைவில் குணமடைந்து வர வாழ்த்துகிறோம்" என்று சிஎஸ்கே தெரிவித்துள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement

சஞ்சு சாம்சன்

புதிய விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன்?

தோனி இல்லாத நிலையில், விக்கெட் கீப்பிங் பொறுப்பை யார் கவனிப்பார் என்ற கேள்விக்கு விடை கிடைத்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடமிருந்து சஞ்சு சாம்சனை சிஎஸ்கே டிரேடிங் முறையில் வாங்கியது. இதற்காக ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கர்ரன் ஆகிய இரு வீரர்களை சிஎஸ்கே விட்டுக்கொடுத்தது குறிப்பிடத்தக்கது. தோனியின் வாரிசாகக் கருதப்படும் சஞ்சு சாம்சன் தான், இந்த இரண்டு வாரங்களுக்கு சிஎஸ்கே அணியின் விக்கெட் கீப்பராகச் செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

புதிய சாதனை

44 வயதில் புதிய சாதனை படைக்கும் தோனி

தோனி தனது 44வது வயதில் இந்த ஐபிஎல் சீசனில் களம் காண உள்ளார். அவர் இந்தத் தொடரில் எந்தப் போட்டியில் விளையாடினாலும், ஐபிஎல் வரலாற்றிலேயே விளையாடிய மிக மூத்த இந்திய வீரர் என்ற சாதனையைப் படைப்பார். இதற்கு முன்னதாக பிரவீன் தாம்பே வசம் இருந்த இந்தச் சாதனையை தோனி முறியடிக்க உள்ளார். கடந்த 2025 சீசனில் 14 போட்டிகளில் விளையாடி 196 ரன்கள் எடுத்த தோனி, ருதுராஜ் கெய்க்வாட் காயத்தால் விலகியபோது கேப்டன் பொறுப்பையும் ஏற்று வழிநடத்தினார். ஆனால், அந்த சீசனில் சிஎஸ்கே கடைசி இடத்தைப் பிடித்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

19 சீசன்கள்

19 சீசன்களில் விளையாடும் சாதனை வீரர்

ஐபிஎல் வரலாற்றில் விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் மனிஷ் பாண்டே ஆகியோருடன் இணைந்து அனைத்து 19 சீசன்களிலும் இடம்பெற்ற வீரர் என்ற பெருமையை தோனி பெற்றுள்ளார். இதுவரை 278 போட்டிகளில் விளையாடி 5439 ரன்களையும், விக்கெட் பின்னால் 205 ஆட்டமிழப்புகளையும் அவர் செய்துள்ளார். கடந்த சில சீசன்களாக முழங்கால் காயம் உள்ளிட்ட பல்வேறு உடல்நலச் சிக்கல்களைச் சந்தித்து வந்தாலும், தனது மன உறுதியால் தோனி தொடர்ந்து விளையாடி வருகிறார். அவர் விரைவில் குணமடைந்து மைதானத்திற்குத் திரும்ப வேண்டும் என்பதே சிஎஸ்கே ரசிகர்களின் வேண்டுதலாக உள்ளது.

Advertisement