தோனி இல்லாமல் சிஎஸ்கே இல்லை; மனம் திறந்த தலைமை பயிற்சியாளர் ஜாகீர் கான்
செய்தி முன்னோட்டம்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜாம்பவான் எம்.எஸ். தோனி ஐபிஎல் போட்டிகளிலிருந்து தனது ஓய்வை அறிவித்தது தனிப்பட்ட முறையில் தனக்கு முற்றிலும் எதிர்பாராத ஒன்றாக இருந்தது என அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளர் ஜாகீர் கான் தெரிவித்துள்ளார். ஐபிஎல் 2027 வீரர்கள் தக்கவைப்பு நாளன்று (Retention Day), பெரிய அளவில் எந்தவொரு பரபரப்பையோ அல்லது ஆரவாரத்தையோ உருவாக்காமல் மிக எளிமையாகத் தோனி தனது முடிவைத் தெரிவித்ததாக ஜாகீர் கான் கூறியுள்ளார். அணி நிர்வாகத்துடனான ஆலோசனையின் போது, "சரி, இவ்வளவுதான். இனி வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க உங்களுக்குக் கூடுதலாகக் கொஞ்சம் பணம் கிடைக்கும்" என மிக இயல்பாகத் தோனி குறிப்பிட்டதை ஜாகீர் கான் நினைவுகூர்ந்துள்ளார்.
கலவையான உணர்வில் ஜாகீர் கான்
தோனி இல்லாமல் சிஎஸ்கே இல்லை
சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களிடம் (Yellow Army) பேசிய ஜாகீர் கான், "ஒருவகையில் எனக்குக் கலவையான உணர்வுகளே ஏற்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் எம்.எஸ். தோனி களத்தில் விளையாடுவார் என அனைவரும் எதிர்பார்ப்போம்.
இந்த முறையும் அவர் அணியுடன் இருக்கத்தான் போகிறார், ஆனால் நிச்சயமாக ஒரு புதிய அவதாரத்தில் இருப்பார். கிரிக்கெட்டில் அவர் கடந்து வந்த பாதை வியக்கத்தக்கது.
என். ஸ்ரீனிவாசன் அவர்கள் சரியாகச் சொன்னது போல, எம்.எஸ். தோனி இல்லாமல் சிஎஸ்கே இல்லை என்பதுதான் நிதர்சனம்" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
2011 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் தோனியின் தலைமையில் விளையாடிய ஜாகீர் கான், வரும் ஐபிஎல் 2027 தொடரில் ஆலோசகர் (Mentor) பொறுப்பேற்றுள்ள தோனியுடன் இணைந்து அணியை வழிநடத்தவுள்ளார்.
2008 முதல் 2025 வரை
தோனியின் பொற்கால ஐபிஎல் பயணம்
கடந்த 2008-ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது ஐபிஎல் ஏலத்தில் 1.5 மில்லியன் அமெரிக்க டாலர் என்ற சாதனை தொகைக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்ட எம்.எஸ். தோனி, 2010, 2011, 2018, 2021 மற்றும் 2023 ஆகிய 5 ஆண்டுகளில் சிஎஸ்கே அணிக்குச் சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்து வரலாறு படைத்தார்.
2024-ஆம் ஆண்டு கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய தோனி, 2025-ஆம் ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராகத் தனது கடைசி ஐபிஎல் போட்டியில் விளையாடினார்.
காயம் காரணமாக 2026 சீசனில் விளையாடாத போதிலும் அணியுடன் பயணித்த 45 வயதான தோனி, தற்போது வீரராக ஓய்வு பெற்று ஆலோசகராகப் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளார்.