ஐபிஎல் 2025: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இன்னும் சில ஆண்டுகள் விளையாட எம்எஸ் தோனி முடிவு எனத் தகவல்
முன்னாள் இந்திய மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) கேப்டன் எம்எஸ் தோனி, ஐபிஎல் 2025 சீசனில் விளையாடுவதற்கான சாத்தியக்கூறு குறித்து பேசியுள்ளார். அவர் கொடுத்த அப்டேட்டில், தான் கிரிக்கெட் விளையாட்டின் கடைசி சில வருடங்களில் அதை அனுபவிக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார். இதன் மூலம், அடுத்த சில வருடங்களுக்கு அவர் சிஎஸ்கே அணியில் விளையாடுவார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளதாகவே பார்க்கப்படுகிறது. சிஎஸ்கே உடனான அவரது எதிர்காலம் குறித்து ஊகங்கள் உருவாகி வரும் நிலையில் இந்த அறிக்கை வந்துள்ளது. குறிப்பாக கடந்த சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு, வளர்ந்து வரும் வீரர்களுக்கு வழிகாட்டியாக லோயர் ஆர்டரில் பேட்டிங் செய்யத் தொடங்கினார்.
எம்எஸ் தோனி அப்டேட்
வீரர்கள் தக்கவைப்பு பட்டியல்
ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக, அணி உரிமையாளர்கள் தக்கவைத்துக்கொள்ளும் வீரர்களின் பட்டியலை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு அக்டோபர் 31 நெருங்கியுள்ளது. தோனியின் நிலைப்பாடு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தக்கவைப்பில் இடம்பெறப்போவது யார் யார் என்பது பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. எனினும், எம்எஸ் தோனி, சிஎஸ்கே அணியில் தொடர்ந்து விளையாடுவதற்கு ஏதுவாக, ஐபிஎல்லில் முன்னர் இருந்த பழைய விதி மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த விதியின்படி, சர்வதேச கிரிக்கெட்டில் ஐந்து ஆண்டுகள் விளையாடாத வீரர்கள் அன்கேப்ட் என அறிவிக்கப்படுவார். இதற்கு முன்னர் அன்கேப்ட் வீரர்களை தக்கவைக்க முடியாது எனும் நிலையில், தற்போது ஒரு அன்கேப்ட் வீரரை தக்கவைத்துக் கொள்ளமுடியும். தோனி இந்த ஆண்டு அன்கேப்ட் வீரராக விளையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.