
ஐபிஎல்லில் இருந்து எப்போது ஓய்வு? உண்மையைப் போட்டுடைத்த சிஎஸ்கே ஜாம்பவான் எம்எஸ் தோனி
செய்தி முன்னோட்டம்
சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) ஜாம்பவான் எம்எஸ் தோனி, இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) இருந்து ஓய்வு பெறுவது குறித்த பரவலான ஊகங்களுக்கு பதிலளித்துள்ளார்.
கடைசியாக சேப்பாக்கத்தில் உள்ள எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்த டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவரது தந்தை, தாய், மனைவி மற்றும் மகள் என அனைவரும் குடும்பமாக பார்வையாளர்களாக பங்கேற்றனர்.
மேலும், அவரது மனைவி சாக்ஷி அவர்களின் மகள் ஷிவாவிடம் கடைசி போட்டி என்று கூறியதாகக் கூறப்படும் வீடியோவும், ஐபிஎல் 2025 சீசன் லீக்கில் தோனியின் இறுதி போட்டியாக இது இருக்கலாம் என்ற தீவிர ஊகங்கள் ரசிகர்களிடையே எழுந்தது.
இருப்பினும், தொழில்முனைவோர் ராஜ் ஷமானியுடனான ஒரு பாட்காஸ்டில், தோனி ஓய்வு பேச்சுவார்த்தைகளை நிராகரித்தார்.
ஓய்வு
உடனடியாக ஓய்வு பெறும் திட்டமில்லை
உடனடியாக விலகத் திட்டமிடவில்லை என்பதை உறுதிப்படுத்திய எம்எஸ் தோனி, தனது வாழ்க்கையில் ஒவ்வொரு ஆண்டும் அதற்கான அணுகுமுறையை ஏற்றுக்கொள்வதாகவும், ஐபிஎல் 2026 இல் பங்கேற்பதைத் தீர்மானிக்க சீசன் முடிந்த எட்டு மாதங்களுக்குப் பிறகு தனது உடல் தகுதியைப் பொறுத்து முடிவு செய்ய உள்ளதாக தெரிவித்தார்.
அவரது உடல் எவ்வளவு சிறப்பாக பதிலளிக்கிறது என்பதைப் பொறுத்து அவரது முடிவு இருக்கும் என்று தோனி வலியுறுத்தினார்.
"முடிவெடுப்பது நான் அல்ல, என் உடல்தான் முடிவு செய்கிறது," என்று அவர் கூறினார்.
மேலும் தனது குழந்தைப் பருவத்தில் இருந்த அதே ஆர்வத்துடன் விளையாட்டை தொடர்ந்து ரசிக்க இலக்கு வைத்துள்ளதாகவும் கூறினார்.
இதற்கிடையே, அவரது பேட்டிங் திறன் குறித்து சிஎஸ்கே ரசிகர்களே விரக்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.