
ஐபிஎல்லில் 30 வயதுக்குப் பிறகு 200 சிக்சர்கள் அடித்த முதல் இந்திய வீரர்; எம்எஸ் தோனி வரலாற்றுச் சாதனை
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் வரலாற்றில் 30 வயதுக்குப் பிறகு 200 சிக்சர்களை அடித்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை எம்எஸ் தோனி பெற்றுள்ளார்.
ஐபிஎல் 2025 போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியடைந்த போட்டியில் அவர் இந்த மைல்கல்லை எட்டினார்.
அந்த போட்டியில் தோனி 19வது ஓவரில் துஷார் தேஷ்பாண்டே வீசிய பந்தில் சிக்சர் அடித்து இந்த சாதனையை படைத்துள்ளார்.
இந்த பட்டியலில் தோனியைத் தவிர வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில் மட்டுமே இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.
இந்திய வீரர்களில், ரோஹித் ஷர்மா (113), அம்பதி ராயுடு (109), தினேஷ் கார்த்திக் (104) ஆகியோர் 30 வயதுக்குப் பிறகு 100 சிக்சர்களுக்கு மேல் அடித்த வீரர்களாக உள்ளனர்.
சர்ச்சை
தோனியின் பேட்டிங் நிலை குறித்து சர்ச்சை
இந்த வரலாற்று சாதனை இருந்தபோதிலும், தோனியின் பேட்டிங் நிலை இன்னும் விவாதப் பொருளாகவே உள்ளது.
43 வயதான விக்கெட் கீப்பர் பேட்டரான எம்எஸ் தோனி தனது முழங்கால் பிரச்சினைகள் காரணமாக விளையாட்டு நேரத்தை கவனமாக நிர்வகிக்கிறார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங் தெரிவித்தார்.
கடந்த வாரம் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வியடைந்தபோது, தோனி 9வது இடத்தில் களமிறங்கியதற்காக விமர்சனங்களை எதிர்கொண்டார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், 25 பந்துகளில் 54 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 7வது இடத்தில் களமிறங்கிய அவர், 11 பந்துகளில் 16 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
இந்த போட்டியில் சிஎஸ்கே 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.