டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் சாதனையை முறியடித்தது இங்கிலாந்து
டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஐசிசி நிகழ்வான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடங்கி, கடந்த ஐந்தரை ஆண்டுகளில் அதிக எண்ணிக்கையிலான வெற்றிகளைப் பதிவுசெய்த அணி என்ற சாதனையை வைத்திருந்த இந்தியாவை இங்கிலாந்து கிரிக்கெட் அணி பின்னுக்குத் தள்ளியுள்ளது. தொடக்க உலக டெஸ்ட் சாம்பியனான நியூசிலாந்தை வீழ்த்தி, மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்று, 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றது. இந்த இரண்டாவது போட்டியில் 323 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் அதன் 32வது வெற்றியாகும். இங்கிலாந்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் 64 போட்டிகளில் பங்கேற்று அதிக எண்ணிக்கையிலான போட்டிகளில் விளையாடியுள்ள அணியாகவும் உள்ளது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதிக வெற்றிகளை பெற்றுள்ள டாப் 5 அணிகளின் பட்டியல்
மேலே குறிப்பிட்டுள்ளபடி 64 போட்டிகளில் 32 வெற்றிகளுடன் இங்கிலாந்து டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதிக வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் உள்ள இந்திய கிரிக்கெட் அணி 53 போட்டிகளில் 31 வெற்றிகளுடன் உள்ளது. ஆஸ்திரேலியா 48 போட்டிகளில் பங்கேற்று 29 வெற்றிகளுடன் மூன்றாவது இடத்திலும், நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் தலா 38 போட்டிகளில் விளையாடி 18 வெற்றிகளுடன் நான்காவது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். இதற்கிடையே, முதல் இரண்டு டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சிகளிலும், இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அணி என்ற பெருமை கொண்ட இந்தியாவின் நிலை, தற்போதைய சுழற்சியில் சிக்கலில் உள்ளது. இந்தியா தனது இறுதிப்போட்டி வாய்ப்பை தக்கவைக்க, பார்டர் கவாஸ்கர் டிராபியில் எஞ்சிய 3 போட்டிகளிலும் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.