'அந்த மனசு தான் சார் கடவுள்' : முகமது சிராஜின் செயலால் நெகிழ்ந்த கிரிக்கெட் உலகம்
ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 17) நடந்த ஆசிய கோப்பை 2023 இறுதிப்போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் அபார வெற்றிக்கு மூல காரணமாக இருந்த முகமது சிராஜ் போட்டிக்கு பிறகு செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது ரசிகர்களால் மியான் மேஜிக் என அழைக்கப்படும் முகமது சிராஜ், கொழும்பு ஆர் பிரேமதேச மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில் அபாரமாக செயல்பட்டு இலங்கையின் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் நிலைகுலைந்த இலங்கை அணி 15.2 ஓவர்களில் 50 ரன்களுக்கு சுருண்டது. இதற்காக முகமது சிராஜுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில், போட்டிக்கு பிறகு பேசிய முகமது சிராஜ் ஆட்ட நாயகன் விருதுடன் தனக்கு வழங்கப்பட்ட பரிசுத் தொகையான சுமார் ரூ.4 லட்சத்தை மைதான ஊழியர்களுக்கு வழங்குவதாக அறிவித்தார்.
மைதான ஊழியர்களுக்கு பரிசுத் தொகையை வழங்கியதன் காரணம்
ஆசிய கோப்பை ஹைபிரிட் முறையில் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடந்தாலும், பெரும்பாலான ஆட்டங்கள் இலங்கையில் நடத்தப்பட்டன. இதில் இறுதிப்போட்டி மட்டுமல்லாது மேலும் பல போட்டிகளிலும் இடையில் மழை பெய்து இடையூறை ஏற்படுத்தியது. பாகிஸ்தான் மற்றும் நேபாளத்திற்கு எதிரான இந்தியாவின் குழு நிலை ஆட்டம், இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான ஆசியக் கோப்பை இறுதிப்போட்டி வாய்ப்பை தீர்மானிக்கும் ஆட்டங்கள் இதனால் பாதிக்கப்பட்டன. அந்த சமயங்களில் மைதானத்தை சிறப்பாக பராமரித்து போட்டி நடப்பதை உறுதி செய்த ஊழியர்களை கவுரவிக்கும் விதமாக பரிசுத் தொகையை வழங்கியதாக முகமது சிராஜ் தெரிவித்துள்ளார். இதேபோல், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலும் மைதான ஊழியர்களுக்கு ஊக்கத்தொகையை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.