INDvsAUS நான்காவது டெஸ்ட் : இந்திய அணியில் மீண்டும் முகமது ஷமியை சேர்க்க திட்டம்
மார்ச் 9 ஆம் தேதி அகமதாபாத்தில் தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது மற்றும் கடைசி டெஸ்டில் முகமது ஷமி மீண்டும் இந்தியாவின் லெவன் அணியில் சேர்க்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. முதல் இரண்டு ஆட்டங்களில் விளையாடிய பிறகு மூன்றாவது டெஸ்டில் ஷமிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. அவருக்குப் பதிலாக உமேஷ் யாதவ் களமிறங்கி, ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸில் 12 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அதிகாரப்பூர்வமாக இடம் பெற இந்தியாவுக்கு கடைசி போட்டியில் வெற்றி தேவை என்பதால், ஷமியை களமிறக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
வீரர்களின் பணிச்சுமையை குறைக்க பிசிசிஐ முடிவு
இந்த ஆண்டில் அடுத்தடுத்து பல முக்கியமான சர்வதேச போட்டிகள் இடம் பெறுவதால், அதில் பங்கேற்க ஏதுவாக வீரர்களின் பணிச்சுமையை குறைக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் ஷமி சிறப்பாக செயல்பட்ட நிலையிலும், மூன்றாவது போட்டியில் அவருக்கு ஓய்வு கொடுத்ததற்கு இதுவே காரணம் எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே முதல் மூன்று ஆஸ்திரேலிய டெஸ்ட் போட்டிகளில் முகமது சிராஜ் இருந்தபோதிலும், அவரால் 24 ஓவர்கள் பந்துவீசி ஒரு விக்கெட்டை மட்டுமே பெற முடிந்தது. ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் அவருக்கு நான்காவது போட்டியில் ஓய்வு கொடுத்துவிட்டு உமேஷ் மற்றும் ஷமி இருவரையும் களமிறக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.