ஆசிய கோப்பை PAKvsNEP : ஒருநாள் கிரிக்கெட்டில் 1,500 ரன்களை கடந்தார் முகமது ரிஸ்வான்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் முகமது ரிஸ்வான் ஒருநாள் கிரிக்கெட்டில் 1,500 ரன்களை கடந்துள்ளார். முல்தானில் நேபாளத்திற்கு எதிரான ஆசிய கோப்பை தொடக்க ஆட்டத்தில் அவர் தனது இரண்டாவது ரன் மூலம் இந்த மைல்கல்லை எட்டினார். இதன் மூலம் சமீபத்திய ஆண்டுகளில் பாகிஸ்தானின் ஒயிட்-பால் அணிகளில் ரிஸ்வான் ஒரு முக்கிய அங்கமாக உருவெடுத்துள்ளார். முகமது ரிஸ்வான் 50 பந்துகளில் 44 ரன்கள் எடுத்த நிலையில் திபேந்திர சிங் மூலம் ரன் அவுட் ஆகி வெளியேறினார். இதற்கிடையில், பாகிஸ்தான் அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் 1,500 ஒருநாள் ரன்களை பூர்த்தி செய்த 37 வது வீரர் என்ற பெருமையை முகமது ரிஸ்வான் பெற்றுள்ளார். அவர் 61 போட்டிகளில் மைல்கல்லை எட்டினார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் முகமது ரிஸ்வான் புள்ளிவிபரம்
31 வயதான முகமது ரிஸ்வான் ஒருநாள் கிரிக்கெட்டில் 34.26 சராசரியுடன் 1,542 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 2 சதங்கள் மற்றும் 10 அரைசதங்கள் அடங்கும். ஒரு இன்னிங்சில் அதிகபட்சமாக 115 ரன்கள் அடித்துள்ளார். பாகிஸ்தான் விக்கெட் கீப்பராக ஒருநாள் போட்டிகளில் ஐந்தாவது அதிக ரன்கள் எடுத்தவராக உள்ளார். பாகிஸ்தான் கீப்பராக கம்ரன் அக்மல் (3,168), மொயின் கான் (3,100), சர்பராஸ் அகமது (2,315), மற்றும் ரஷித் லத்தீப் (1,709) ஆகியோர் மட்டுமே ரிஸ்வானை விட அதிக ரன்களை குவித்துள்ளனர். இதற்கிடையே, நேபாளத்திடம் திணறி வரும் பாகிஸ்தான் 30 ஓவர்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து ரன்குவிக்க போராடி வருகிறது.