தொடங்கியது மேஜர் லீக் கிரிக்கெட் தொடர்; முதல் போட்டியில் நைட் ரைடர்ஸை பந்தாடியது சூப்பர் கிங்ஸ்
மேஜர் லீக் கிரிக்கெட் 2023 (எம்எல்சி) இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை (ஜூலை 14) காலை 6 மணிக்கு டல்லாஸில் உள்ள கிராண்ட் ப்ரேரி ஸ்டேடியத்தில் தொடங்கியது. முதல் போட்டியில் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸை எதிர்கொண்ட டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. டாஸ் வென்ற லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் கேப்டன் சுனில் நரைன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரும் கேப்டனுமான ஃபாஃப் டு பிளெசிஸ் தொடக்கத்திலேயே அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். டெவோன் கான்வே அரைசதம் அடித்ததோடு, மில்லர் அதிகபட்சமாக 42 ரன்களில் 61 ரன்கள் எடுத்ததன் மூலம் 6 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது.
பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் முகமது மொஹ்சின் அபார பந்துவீச்சு
கடினமான இலக்குடன் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் களமிறங்கிய நிலையில், அமெரிக்காவின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜுவான் தெரோன் முதல் ஓவரிலேயே மார்ட்டின் கப்டில் மற்றும் ரிலீ ரோசோவ் விக்கெட்டுகளை வீழ்த்தி பின்னடைவை ஏற்படுத்தினார். லாஸ் ஏஞ்சல்ஸ் அணியில் ஆண்ட்ரே ரஸ்ஸல் அதிகபட்சமாக 34 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தாலும், மற்ற வீரர்கள் யாரும் ஒத்துழைக்காததால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. டெக்சாஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் முகமது மொஹ்சின் 8 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்ற, நைட் ரைடர்ஸ் 14 ஓவர்களில் 112 ரன்களுக்கு சுருண்டது. மொஹ்சின் சிறப்பாக பந்துவீசினாலும், ஆட்டநாயகன் விருது டேவிட் மில்லருக்கு வழங்கப்பட்டது.